கடைசிப் புகலி : தாஹர் பென் ஜெல்லோன்

(Le dernier immigré: Tahar Ben Jelloun)

மூலம்: பிரெஞ்சு 

தமிழில்: லக்ஷ்மி 

கடைசி அராபியப் புகலி, ஒரு வட ஆபிரிக்கன், இன்று பிரெஞ்சு மண்ணை விட்டுப் புறப்பட்டான். 

பிரான்ஸ் நாட்டின் சார்பாக முதலமைச்சரும் உள்நாட்டமைச்சரும் மொகமட் லெமிகிரிக்கு நன்றியறிதலைத் தெரிவித்து, உத்தியோகபூர்வமாக வழியனுப்புவதற்கு, வருகை தந்திருந்தார்கள். மொகமட் உணர்ச்சிவசப்படவோ, ஆத்திரப்படவோ இல்லை. அவன் தனது சொந்த நாட்டுக்கு என்றைக்குமாக மீளத் திரும்பிச் செல்வது குறித்த  மகிழ்ச்சியில் இருந்தான். அவனுக்கு அன்பளிப்பாக கம்பளியிலான ஒரு ஒட்டகப் பொம்மையும் ஒரு சின்னக் கொடியும் கிடைத்தன. கொடியின் ஒரு பக்கத்தில் நீலம் – வெள்ளை – சிவப்பு நிறங்களும் மறுபக்கத்தில் சிவப்பு நிறத்தின் நடுவில் ஒரு பச்சை நட்சத்திரமும் இருந்தது. அவனிடம் இருந்து பெரும் புன்னகையொன்றை வருவிப்பதற்காக அவனைக் கட்டாயப்படுத்திய தொலைக்காட்சிக் கமராக்களுக்கும் புகைப்படப் பிடிப்பாளர்களுக்கும் முன்னால் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாது  நின்றிருந்தான். பெரியதொரு சிரிப்புடன் அந்த இரட்டைக்கொடியை, தான் அணிந்திருக்கும் பழைய கோட்டின் பொக்கற்றினுள்ளே அவன் திணித்தான்.

பிரான்ஸ் ஆசுவாசம் கொள்கிறது! 

எந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்குத் தன்னைத் தயார்ப்படுத்தாமல் பிரான்ஸ் இருந்ததோ, அவற்றிற்கு இனித் தீர்வு  தேவையில்லை.

பிரான்ஸ் தன்னுடைய காலனிய வரலாற்றின் கனத்த பக்கம் ஒன்றைப் புரட்டுகிறது. இப்போது ஒரு மந்திரவாதியின் சொடுக்கைப் போன்றதொரு நொடி அசைவில் ஒரு நூற்றாண்டு கால அராபிய வியாபகம் பிரான்சில் இருந்து அழிக்கப்பட்டு விட்டது. ஒரு அத்தியாயம் நிறைவுற்றது.

காரசாரமான மசாலா சமையலின் மணங்களினால் இனி நாடு பதகளிக்காது. நூதனமான கலாச்சாரம் கொண்ட நாடோடிக் கும்பலினால் இனி நாடு ஆக்கிரமிக்கப்படமாட்டாது. நாட்டு மக்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு இனிமேலும் இனவாதம் ஒரு காரணமாக இருக்கப் போவதில்லை. ஆபிரிக்கர்கள், ஆசியர்கள், கிழக்கைரோப்பியர்கள் இன்னும் எஞ்சி இருக்கின்றார்கள். இவர்கள் குறிப்பிடத்தக்க அளவிலான பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதில்லை. அராபியர்களைப் போல் தாங்களும் துன்பம் அனுபவிக்க நேரிடும் எனும் பயத்தில், ஆபிரிக்கர்கள் தங்களை அமைதியாக வைத்திருக்கின்றார்கள். கைவிடப்பட்ட கட்டிடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிய இவர்களில் அநேகமானவர்கள் அவர்களுடைய குழந்தைகளுடன் நித்திரையில் கருகிப் போனார்கள். ஆசியர்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் எவருக்கும் தொந்தரவில்லாமல் தங்களுடைய பாட்டில் இருக்கிறார்கள்.

தீவிர வலதுசாரிக்கட்சி மட்டும்தான் இலட்சக்கணக்கான வட ஆபிரிக்கர்களின் இந்த வெளியேற்றம் பற்றிக் கவலைப்படுகிறது. இந்த கட்சி தனது அதியுயர் பெறுமதி வாய்ந்த ஆசைகளில் ஒன்று நிறைவேற்றப்பட்டதைக் கண்டு திருப்தியடையும் அதேவேளை, தனது  நிகழ்ச்சிநிரலின் முழுப்பாகம் விடுபட்டுப் போனதை உணருகின்றது. அவர்கள் இருந்ததன் அனுகூலம், அக்கட்சி தன்னை முன்னேற்றவும், தேர்தல் அபிப்பிராய வாக்கெடுப்புகளில் முன்னிடத்தை வகிக்கவும், ஏன் இன்னும் 2002ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் இறுதிச் சுற்றுவரையிலும் வரவும் முடிந்திருக்கிறது. வடஆபிரிக்கப் புகலிகள் இல்லாதபோது இப்போது என்ன செய்வது என்று தங்களை கேட்கிறார்கள். தங்களை ஒரு அரசியல் சக்தியாக தக்க வைத்துக் கொள்வதற்கு, அவர்கள் பிரெஞ்சு மக்களுக்கு இப்போது எந்த தோட்டத்து வெருளியைக் காட்சிப்படுத்துவார்கள். வெறுப்பையும் துவேசத்தையும் விதைக்கின்ற  கட்சியானது திடீரென்று கையறு நிலைக்குப் போயிற்று. இந்த நிலைமையானது அக்கட்சியின் எதிர்பாராத மாற்றத்திற்கும் திடீரென்று ஏற்பட்ட அதன் மனிதாபிமானத்துக்கும் காரணமாயிற்று. 

அக்கட்சியின் ஆதரவாளர்கள் சில கூட்டங்களை ஒழுங்கு செய்தார்கள். முக்கியமாக மார்செய் நகரத்தில், அவர்கள் தாங்கியிருந்த பதாகைகளில் இப்படி எழுதியிருந்தார்கள்:

“நாங்கள் மிகவும் நேசிக்கும் எங்களுடைய அராபியர்களை எங்களிடம் திருப்பித் தாருங்கள்”

“பிரான்ஸ் முன்பிருந்ததுபோல் இப்போது இல்லை. அங்கு அராபியர்களின் மூலைக்கடைகள் இல்லாத குறை தெரிகின்றது”

பழைய சுவரொட்டியொன்றில்,

‘3 மில்லியன் வேலையற்றவர்கள் = 3 மில்லியன் மேலதிக புகலிகள்’ என்று எழுதப்பட்டிருந்ததைக் கிறுக்கி விட்டு ‘அராபியர்கள் தேவை’ என்று சேர்க்கப்பட்டது. இன்னொரு முகம் தெரியாத கரமொன்று ‘துவேஷம் தேவை’ என்றும் வரைந்தது.

வட ஆபிரிக்கர்களை வெளியேற்றி நாட்டைத் தூய்மையாக்குவதற்கு சில மாதங்கள் எடுத்தன. ஆனால், அநேகமாக எல்லாரும் ஏற்றுக் கொண்டது என்னவென்றால் பதற்றம் இல்லாது எல்லா விடயங்களும் நடந்தேறின என்பதைத்தான்.  உண்மையில், புகலிகளிற்கு தெரிவுக்கான உரிமை  இருக்கவில்லை. ஒன்றில் போவதை ஏற்றுக் கொள்ளுதல் அல்லது ‘சிலி நாட்டின் சந்தியாகோ” என்று பெயரிடப்பட்ட, ஒருவிதமான வதைமுகாம் வாழ்நாள் தடுப்புக் காவல் மையமொன்றில் இருத்தல் என்பதாகத்தான் இருந்தது.

எல்லாமே தயாராக இருந்தன.

தடித்த சீலைகளினால் மூடிக் கட்டப்பட்ட லொறிகள், சாம்பல் நிறக் கூடாரங்கள், முள்வேலிகள், காவலாளிகள், உயிரற்ற உடலை மூடும் வெண்சீலைகள் என்பதாக…. வெளியேறுகின்ற இந்தப் பயணத்தை  பெரும்பாலான புகலிகள் விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். அதற்குக் காரணம் அவர்கள் தங்கள் நாடு பற்றிக் கொண்டிருந்த திமிரும் பெருமையும்தான். அதனை அவர்களால் முகரக்கூடியதாக இருந்தது. கௌரவம் என்பது வெகுதூரத்தில் இல்லை. தொட்டுணரக் கூடிய தூரத்தில்தான்  இருக்கிறது.

இடதுசாரிகளினதும், தீவிர இடதுசாரிகளினதும், கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த சில முக்கியமானவர்களினதும் சம்பிரதாயமான  எதிர்ப்புகளுக்கு அரசாங்கம் அடிபணியவில்லை.  பிரான்ஸின் முதலமைச்சர் சொன்னதுபோல் அரசாங்கம் தான் எடுத்த முடிவில் உறுதியாகத்தான் இருந்தது.

பிரான்ஸின் உள்நாட்டமைச்சர் இவ்வாறு பிரகடனப்படுத்தினார்:

“பிரான்ஸ் தனது வரலாற்றில் அந்த மொழியினால் எழுதப்பட்ட இந்தப் பக்கத்தைப் புரட்டுவதில் இறுதியில் வெற்றி கண்டிருக்கின்றது” அந்த மொழி எது என்று உள்நாட்டமைச்சரிடம் ஒரு பத்திரிகையாளர்   கேட்டபோது அதற்கு அவர், “அது எங்களுக்குச் சொந்தமாக இருந்து நாங்கள் தொலைத்த ஒரு பூமியின்மீது சிந்திய குருதியின் மொழி! மறந்து விடாதீர்கள்! காலனித்துவத்தினால் நாங்கள் அங்கிருந்து பெற்ற நன்மைகள் ஏராளம்” என்று  பதிலளித்தார். 

புகலிகளின் இந்தப் புறப்பாடுகள் பிரான்ஸ் நாட்டில் மிகத் தீவிரமான பிரச்சினைகளைத் தோற்றுவித்தாலும், அரசாங்கம் பதட்டத்திற்கான  எந்தவிதமான அடையாளங்களையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படாமல் இருந்தன. தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டி இருந்தன. கம்பெனிகள் தங்களுடைய வேலையாட்களில் கணிசமானவர்களை வேலைநீக்கம் செய்ய வேண்டி இருந்தன. இறைச்சிக் கடைகளும் – மளிகைச் சரக்கு கடைகளும் மறைந்தன. அவற்றில் சில முடிதிருத்து நிலையங்களாகவும்  தொலைபேசி விற்பனை நிலையங்களாகவும் உருமாறின. வாரத்திற்கு ஒரு தடவை மட்டுமே இனி குப்பைகள் அகற்றப்படும். வேலையாட்களில் முக்கால்வாசிப்பேர் இல்லாததால் ருவாசி சர்வதேச விமானநிலையம் மெதுவாக இயங்கியது. ஆஸ்பத்திரிகளில் பணியாளர்களினதும் வைத்தியர்களினதும் பற்றாக்குறை ஏற்பட்டது.

எத்தனையோ விடயங்கள் இல்லாத குறை இருக்கின்றது. ஆனால் நாடு நன்றாக இருக்கின்றது. பிரான்ஸ் சுதந்திரமாக இருப்பதாக, முக்கியமாக விடுதலையடைந்து விட்டதாக உணர்கின்றது. இதற்காக இழந்தது அதிகம்தான். சரி போகட்டும் விட்டுவிடு. இறுக்கமான வலதுசாரி அமைப்பின் தலைவரொருவர் மூக்காற் பேசியபோது, “பிரான்ஸின் இந்த திடீர் நடுக்கம் என்பது இந்தப் பெருவாரியான வெளியேற்றம். இது நடக்காமல் இருந்திருந்தால் எங்கள் நாடு இஸ்லாமிய மயமாக்கப்பட்டிருக்கும்”

வடஆபிரிக்கப் புகலிகள் இங்கில்லாதிருந்த காலத்தைப்போல், மீண்டும் வேலை செய்வதற்கு மக்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள். எல்லாமே சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. பிரெஞ்சு மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தை மீளமைப்பதற்கு தேவையான உந்துசக்தியை பெற்றுக்கொண்டார்கள். நெகிழ்ச்சித்தன்மையுடன் முயற்சிகளை முன்னெடுக்க ஆயத்தமானார்கள். ஒரு வாரத்திற்கு 35 மணித்தியாலங்கள் மட்டுமே வேலை செய்வதென்பதை தைரியத்துடன் விட்டுக் கொடுத்தார்கள். அரசியற் கட்சிகள்மீது நம்பிக்கை கொண்டார்கள். தொழிற்சங்கங்கள் சமரச ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. வேலைநிறுத்தங்கள் இல்லை. எதிர்ப்பு ஊர்வலங்கள் இல்லை. மனிதக்கும்பலின் காட்சியானது வெள்ளையாக நம்பிக்கை தருவதாக அற்புதமாக தோற்றமளித்தது. பாரிஸ் வாசிகள் இப்போது, குறிப்பாக, நாகரீகமானவர்களாகவும் அன்பானவர்களாகவும்  இருக்கிறார்கள். அவர்களிடம் மீண்டும் புன்னகை ஒட்டிக்கொண்டது. கார்ச் சாரதிகளை இம்சிக்கும் நகரசபையின் நடைமுறைக்கு அவர்கள் இனி எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை. வடஆபிரிக்கர்கள் தங்கள் முயற்கூடுகள் போன்ற இருப்பிடங்களை விட்டு வெளியே வருவதற்குத்  துணிவில்லாமல் இருந்த காலத்தில் இருந்தது போன்ற ஒரு காலம் மீண்டும் திரும்பியுள்ளது.

எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது அல்லது ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது.

ஒரு விதமான சோகம் காற்றில் கவிந்திருந்தது. ஆனால் இதற்கான காரணத்தை புகலிகளின் வெளியேற்றத்தின்மீதா அல்லது நிலையற்ற காலநிலையின்மீதா சுமத்துவதென்பது தெரியவில்லை.

இதற்கிடையில், சில காலமாக, சில நூதனமான சம்பவங்கள் நடைபெற்றன. 

தொலைக்காட்சி, வானொலி ஊடகவியலாளர்கள் பேசும்போது அவர்களுடைய வசனங்களில்  வெற்றிடம் இருந்தது. 

அங்கு ஓட்டைகள், பற்றாக்குறைகள் இருந்தன.

அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. அவர்களுடைய பேச்சுக்களில் சொற்கள் அல்லது சொற்றொடர்கள் தவறி இருந்தன.

அவர்கள் அதற்காக மன்னிப்புக் கோருகின்றார்கள். இடையில் ஏதோ ஒரு இருமல் அல்லது தற்செயலான மறதி வந்தது என்பதுபோல் காட்டி பின்னர் தொடர்கிறார்கள். இந்தக் குழப்பமானது எல்லோரையும், தொற்றிக் கொள்கிறது. ஆண்களைப் போலவே பெண்களையும் குழப்புகிறது.

எழுத்துத்துறையை எடுத்துக் கொண்டால், இந்தத் தொலைந்த சொற்கள், அவற்றிற்கான சுற்றி வளைத்த விபரிப்புகளால் பிரதியீடு செய்யப்படுகின்றன.

உதாரணத்திற்கு:

“கோடை காலத் தொடக்கத்தில்  கிடைக்கின்ற, ஜாம் பழக்களி செய்யக்கூடிய  இந்தப் பழம்(1) இன்னும் சந்தைக்கு வரவில்லை. அதை எப்படிச் சொல்வதென்று எனக்கு இப்போது மறந்து விட்டது” (1-அப்பிரிகாட்)

“——-(2) பாவனை உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்.” (2-அல்கஹோல்)

“*—–(3) பாலுடன் கலப்பது ஈரலுக்கு கூடாது.” (3-கஃபே)

“மிருதுவான, நிறைய ருசியுள்ள, இந்த சிவப்பு நிற மசாலா பொருள் (4) பிரான்ஸின் மளிகைக் கடைகளில் இப்போது கிடைக்கவில்லை.” (4-சஃப்ரன்)

“சிறுவர்கள் அதிகளவில் ——(5) குடிப்பது பரிந்துரைக்கப்படவில்லை. (5-சோடா)

“சாப்பாட்டின் இறுதியில் ஒரு ——-(6) சாப்பிடுவது சமிபாட்டுக்கு உதவும் என்று கருதப்படுகிறது. (6-சோர்பே)

“வங்கிகள் இனிமேல் ———(7) களிற்கு பணம் கொடுப்பார்கள்” (7-செக்)

ஜொனியின் கஷ்ட காலம். கடைசி இசை நிகழ்ச்சியின்போது அவனுடைய —–(8) களவாடப்பட்டு விட்டது” (8-கிற்றார்)

“இனிமேல் ஆசிரியர்கள் ——-(9)வையோ ——(10)வையோ கற்பிக்கமாட்டார்கள். சொற்கள் பறந்து போய்விட்டன” (9-அல்ஜெப்ர், 10-ஷிமி) 

உள்நாட்டமைச்சர் சொன்னார்:  “கவனம்! இது செய்பவர்கள், எப்படிச் சொல்வது, சரி, அதாவது முஸ்லிம்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் ——– (11) செய்பவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்” (11-அமல்கம்)

“பிரசித்தமான பாடகர்கள் பங்குபற்றும் பெரும் இசைவிழாக்கள், கச்சேரிகள் நடைபெறும் பிரமாண்டமான மண்டபம் ——–(12) திருத்த வேலைகளுக்காக மூடப்பட்டுள்ளது” (12-செனித்) 

“——–(13) இற்குப் பிறந்தவர்கள் தங்களுடைய தாயாரின் குடும்பப் பெயரை வைத்திருப்பதற்கு உரிமையுள்ளது” (13-எக்ஸ்) 

“France Culture (பிரான்ஸ் குல்துர்) வானொலி Stéphane Mallarmé (ஸ்டெஃபான் மலார்மே)யின்   பிரசித்தமான ——–(14) கவிதை பற்றிய நிகழ்வை ரத்துச் செய்துள்ளது” (14-நீலம்)

பிரெஞ்சுமொழியில் வழக்கத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகள் இப்போது பொத்தல்களாக இருக்கின்றன.

என்னதான் நடந்தது? எப்படித் திடீரென்று இந்த ஞாபக மறதி

பொதுமைப்படுத்தப்படுகின்றது? எப்படி இது அனைவரையும் பாதிக்கின்றது.

இது மிகவும் விசித்திரமான ஒரு நிகழ்வு. 

பிரெஞ்சுமொழியானது தனது சொற்களை இழந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்வதற்கு பத்திரிகைத்துறைக்கு நீண்ட காலம் எடுத்தது. மொழிவல்லுநர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் எவரும் நம்பிக்கையூட்டக்கூடிய எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. றென் (Rennes) நகரத்தின் சுற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு குக்கிராமமான (சென்பிரிஸோன்கோகில்) Saint-Brice-en-Cogles என்னுமிடத்தில் இருந்த ஒரு நூல்நிலையத்தில் இருந்த கிராண் ரொபேர் (Grand Robert), கிராண் லாறூஸ் (Grand Larousse), அஷெத் (Hachette) போன்ற அகராதிகள் புத்தக அடுக்கில் இருந்து விழுவதை அந்த நூல்நிலையப் பொறுப்பாளர் கண்டுபிடிக்கும்வரை, அரசியல்வாதிகள் இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவைகள் புத்தக அடுக்கில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக கீழே விழுந்தன. அவைகளை அடுக்கில் வைத்திருக்க முடியவில்லை. எதோ ஒரு சக்தி அவைகளை தூக்கி வீசி நிலத்தில் போட்டது.

நூல்நிலையப் பொறுப்பாளர். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பரிசீலித்தார். குறிப்பாக எதுவும் அவருக்குத் தென்படவில்லை. அவைகளை மீண்டும் புத்தக அடுக்கில் வைக்கும்போது சொல்லசைகளின் கூட்டங்கள் தப்பியோடியதையும்  சவர்க்காரக் குமிழிகள் போல அவை நிலத்தில் பரவியதையும் அவர் கண்டார் அல்லது கண்டதாக நம்பினார். அது ஒரு தரிசனம் அல்லது அயர்ச்சியினால்  ஏற்பட்ட ஒரு மாயத்தோற்றம்.

சிறிது நேரம் கழித்து அவர் றொபேர் (Robert) ஐத் திறந்து பார்க்கிறார். பக்கங்களில் எதுவுமே இருக்கவில்லை. பக்கங்கள் எல்லாமே  வெள்ளையாக இருந்தன. இது அச்சகம் விட்ட தவறாகத்தான் இருக்கவேண்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். ஆனால், மற்ற இரு அகராதிகளும்கூட  ஒரு எழுத்தையும் காணவில்லை. நிலத்தை பார்த்தால் சொல்லசைகள் நிலத்தில் இருந்ததற்கான தடயம் எதுவும் இருக்கவில்லை.

பறந்து போய்விட்டன.

காற்றில் தொலைந்துவிட்டன. 

வெளியேறிச் சென்ற புகலிகளின் பயணப்பெட்டிகளுக்குள் ஏறி அவை வேறெங்கோ  சென்றுவிட்டன.

பிரான்ஸ் திக்கித் திணறுகின்றது.

பிரான்ஸ் சுற்றுவசனத்தில் பேசுகின்றது.

பிரெஞ்சு மொழிக்குள் குடியேறி இருந்த அரபு சொற்கள் இப்போது  மறைந்துவிட்டன. அவைகள் தப்பியோடி விட்டன. 

அவற்றை எப்படி திரும்ப வரவழைப்பது?

இந்த மொழியின் ஆரோக்கியத்தை, சந்தத்தை, நுட்பங்களை மீட்டெடுப்பதற்கு எந்த மொழியியலாளர் அவற்றை வெகுவிரைவில் செய்து முடிப்பார்?

இவைகளைக் கடந்து நாங்கள்  நகர முடியுமா? 

இந்த பிரச்சினை தொடர்பாக அமைச்சர்கள் கூடி நீண்ட நேரம் பேசினார்கள். அங்கும் எந்த விதமான திருப்திகரமான தீர்வும் எட்டப்படவில்லை.

சட்டக்கல்விப் பீடாதிபதி தன்னைக் கேட்கிறார்; “ஆனால் ஒரு சொல் என்பது யாருக்குச் சொந்தமானது? அதைக் கண்டு பிடித்தவருக்கா அல்லது அதனைப் பாவிப்பருக்கா? அல்லாமலும், இந்தப் புகலிகள் எதையும் கண்டு பிடிக்கவில்லை என்பதை நாங்கள் மறக்கக் கூடாது. அவர்கள் அப்படி இருந்திருந்தால், இங்கு வந்து வேலைக்காக எங்களிடம் மண்டியிட்டிருக்க மாட்டார்கள்”

கிராண்ட் ரொபேர் (Grand Robert) இன் முக்கிய புலமையாளர்களில் ஒருவரும்  மொழிவல்லுநருமான  அலன் ரே (Alain Ray) பதிலளிக்கும்போது,   “பொதுவாக ஒரு சொல் குறிப்பாக யாருக்கும் சொந்தமானதல்ல, ஒரு சொல்லானது பாவனையில் இருக்கும்போது மட்டும்தான் அதற்கு வாழ்வுண்டு. சொற்கள் காணாமற் போயின அல்லது மறைந்து போய்விட்டன என்றால்  அவற்றை யாரும் பாவிக்கவில்லை என்பதுதான். ஆனால் நாங்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினை எங்களுடைய தகைமைகளுக்கு அப்பாற்பட்டது. ஏனென்றால் இது ஒரு அரசியல்ரீதியான பிரச்சினையே அன்றி மொழிரீதியான பிரச்சினையல்ல. புகலிகளை அவமதிப்பதனால் பீடாதிபதி அவர்கள் உண்மையான பிரச்சினையில் இருந்து விலகிச் செல்கிறார். இங்கு இல்லாமற்போன அரபுச் சொற்களுக்காக வேறு சொற்களைப் பிரதியீடு செய்வதென்பதல்ல விடயம். மொழியானது தனது இருப்பின் சமநிலையைப் பேணிக்கொண்டு மீளவும் அகராதிகளையும், நாவல்களையும், பேச்சுகளையும், அன்றாட உரையாடல்களையும் (ஏனெனில் தொலைந்த சொற்கள் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடையவை) சேர வேண்டும். அந்த சொற்களில் சில, நிச்சயமாக, விஞ்ஞானரீதியானவையும் இராணுவரீதியானவையும் ஆகும். அவை சரளமாகப் பாவிக்கப்படாத சொற்கள். ஆனால் ஏனையவை எங்களுடைய நாளாந்த வாழ்க்கையின் அங்கமாக இருக்கின்றன.

*இஞ்சார், நான் ஒரு கறுப்புத் தண்ணி ——– இல்லாது எடுக்கிறேன். மிகவும் அசௌகரியமாக ஒரு ——– இல் அமர்ந்தபடி, நான் ஒரு ——- இல் அல்லது ஒரு சாதாரணமான ——– இல் அல்லது வசதியான ஒரு நிற ——— வில் ஒரு ——வும் —–வும் சேர்ந்த பூங்கொத்தொன்றின் முன்னால் அமர்ந்திருப்பதை விரும்பி இருப்பேன்”

ஒரு கணம் அவர் நிறுத்தினார். ஒரு விரைவான தீர்வை எதிர்பார்த்துக் கொண்டிருந்த தன்னுடைய உதவியாளரைப் பார்த்தார். பின்பு திரும்பவும் வாசித்தார். ஒவ்வொரு அரபுச் சொல் வரும் இடத்திலும் ஒரு தரம் கைகளைத் தட்டியபடி, “நான் சீனி இல்லாமல் கொஞ்சம் கோப்பி குடிப்பேன், ஒரு முக்காலியின் மேல் மிகவும் அசௌகரியமாக அமர்ந்தபடி. ஆனால் நான் ஒரு சாய்கதிரையில் அல்லது ஒரு சாதாரணமான மெத்தையில் அல்லது வசதியான ஒரு கரமுவாஸ் நிற சோபாவில் வில்லாக்களும் கமெலியாக்களும் கலந்த பூங்கொத்தொன்றின் முன்னால் அமர்ந்திருப்பதை விரும்பி இருப்பேன்” 

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, பீடாதிபதி அலன் ரேயைத் தொடரும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

அலன் ரே தொடர்கிறார்: “சேதத்துக்குக்குள்ளாகியிருக்கும்  ஒரு கப்பலைப் போல் இருக்கின்ற உங்களுடைய அரசியலுக்கு எப்படி நாங்கள் முட்டுக்கொடுக்க முடியும்? உங்களுடைய பேச்சுக்களின்போது நீங்கள் பென்னாம்பெரிய குண்டுகளைத் தூக்கிப் போடுகிறீர்கள். நீங்கள் வைரக்கல்லுடன் சாம்பிராணிக்கட்டியை கலக்கிறீர்கள். உங்களுக்குத் தேவை ஏற்படும்போது நீங்கள் எதையும் எதனுடனும் கலப்பீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் தாறுமாறாக செய்கிறீர்கள். குற்றம் செய்த பொடியளுக்கு அவர்கள் அரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக மட்டும் மிகவும் அதிகமான அபராதம் விதிக்கிறீர்கள். உங்களை பொறுத்தவரையில் அவர்கள் எல்லோருமே போதைப்பொருள்  விற்பவர்கள்தான். உங்களுக்கு புனுகுக்கும் பூனைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. கல்லுக்கும் கற்பூரத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை. நீங்கள் எலுமிச்சம்பழப்பானத்திற்குள் மதுவைக்  கலக்கிறீர்கள்….. ஏனெனில் சிலர் தங்களை அமைச்சர்கள் லெவலில்  நினைத்துக் கொள்கிறார்கள். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், தங்களை மன்னர்களாகவோ  அல்லது கடற்படைத் தளபதிகளாகவோ  கருதிக்கொள்கிறார்கள். எனவே இவர்கள் ஒரு வைத்தியரை சென்று பார்ப்பது அவசியம். மேலும் இவர்கள் வெளிநாட்டவர்களை தெருநாய்களுக்கு ஒப்பாக நினைப்பதை நிறுத்த வேண்டும். உங்களுடைய கொள்கைகளுக்கு நான் மதிப்பெண்கள் தருவதாயின் அது பூச்சியமாகத்தான் இருக்கும்.” 

இல்லாதிருக்கின்ற சொற்களின் பயன்பாட்டை அலன் ரே ஏன் மீளக் கண்டு பிடித்தார் என்று ஒருவர் கேட்கிறார். அவரைப் பார்க்காமலே அலன் சொல்கிறார்: “ஏனென்றால், இதில் எனக்கு முன்மதிப்பீடுகள் எதுவும் இல்லை. எனக்கு மொழிகளின்மீதும் மொழிகளைக் காவிச் செய்பவர்களிலும் ஆர்வம் உண்டு. ஒரு மொழியியலாளரும்  வரலாற்றாசிரியருமாக சொற்களின் மூலவேர்கள் பற்றி அறிவதில்  எனக்கு ஆர்வமுண்டு. நூற்றுக்கணக்கான அரபுச் சொற்கள் எந்த பயண அனுமதியோ எல்லைக் கட்டுப்பாடுகளோ இல்லாது எங்களுடைய மொழிக்குள் வந்து சேர்ந்தன. அந்தச் சொற்கள் இல்லாமல் விஞ்ஞானம் தடத்தில் பயணிக்க  முடியாது. அரபு இல்லாமல், இலக்கங்கள் இல்லாமல், அட்சரம் இல்லாமல், கணக்கியல் இல்லாமல், கணிதம் என்பது இல்லை. மிகவும் இயல்பாக அவை பிரெஞ்சு மொழிக்குள் வந்தமர்ந்து விட்டன. அச் சொற்கள் மொழியை வளம்படுத்தின. இப்போது அவை இன்றியமையாதவையாகி விட்டன. நாங்கள் அவைகளை இங்கு இறக்குமதி செய்தோம். மிகச் சரியாகச் சொல்வதென்றால் நாங்கள் அவர்களிடம் இருந்து கடன் வாங்கினோம். ஏனெனில் எங்களுக்கு அதற்கான தேவை இருந்தது. ஒரு நாள் அவற்றைத் துரத்துவோம் என்றோ  பிரான்சின் உளரீதியான சமநிலையை பாதிக்கும் அளவு தாக்கத்தை ஏற்படுத்தி எங்களை விட்டு வெளியேறும் என்றோ யாரும் எப்போதும் யோசித்திருக்கவில்லை.

தன்னுடைய குறுக்குச் சொற்றொடர் விளையாட்டில் வெற்றிபெற  முடியாமல் இருக்கும் கலாச்சார அமைச்சர் “இப்ப என்னதான் செய்யிறது?” என்கிறார்.

அல்ஜீரிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு மாநிலச் செயலாளர் சொல்கிறார். “வெளியேற்றப்பட்ட புகலிகள் திரும்பி வரவேணும்!” 

“இது சாத்தியமென்று எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் அவர்களுக்கான செருக்கும் பெருமையும் அவர்களுக்கு இருக்கின்றது.” என்று அலன் ரே சொல்கிறார்.

தன்னுடைய சொற்சித்திர விளையாட்டுடன் போராடிக் கொண்டிருக்கும் இன்னொரு அமைச்சர் “தனது மொழி இப்படி துண்டாடப்படுவதை  பிரான்ஸினால் தாங்கிக் கொள்ள முடியாது!” என்று சொல்கிறார். 

இதற்கு பக்கபலம் சேர்ப்பது போல கல்வியமைச்சர் “நான் இனி எழுத்துக்களை வைத்து சொற்களை கண்டு பிடிக்கும் விளையாட்டை (scrabble) விளையாட முடியாது!” என்று சொல்கிறார். 

“பிரான்ஸ்! நல்ல பிரான்ஸ்தான்! ஆனால் பிரான்ஸ் தனது மொழியைப் பேசும் இந்த மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தனது மொழியை எழுதும் இந்த மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தனது மொழியை அழகுபடுத்தும் இந்த மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.” என்று அலன் ரே முழங்குகிறார்.

பிரான்ஸ் தனது இந்த நெருக்கடி நிலையை பயன்படுத்தி சரியான  வழியில் சிந்திக்க வேண்டும். கொஞ்சம் யோசித்து  தனது  அரசியல் பொருத்தப்பாட்டு முடிவுகளை எடுப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும். பிரான்ஸ் தனது தத்துவ நிலைப்பாட்டுக்கும்  விழுமியங்களுக்கும் கௌரவமளிக்க வேண்டும் என்றால் அது வெறுமனே இஸ்லாத்தின்மீதும் முஸ்லிம்களின்மீதும் சேற்றை வாரி இறைப்பதன் மூலம்  அல்ல. கனவான்களே நன்றி! வணக்கம்!”

பேரெதிர்ப்புகளின் ஆர்ப்பரிப்புகள் கேட்கின்றன.

அலன் ரே  கூட்டத்தில் இருந்து கிளம்பிச் செல்கிறார். அங்கிருந்த உயரதிகாரிகள் எல்லோரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஒரு கிழமைக்குப் பின்னர், நாட்டின் ஜனாதிபதி இரவு 8:00 மணி தொலைக்காட்சிச் செய்திகளில் தோன்றுகிறார். அவரை பார்க்க கஷ்டமாக இருந்தது.

“பிரெஞ்சுப்பெண்களே! பிரெஞ்சு ஆண்களே! அன்புக்குரிய என் தேசத்தவர்களே!! அஸ்ஸலாம் அலைக்கும்!

ஆம்! உங்களுக்கு நான் சொல்வது நன்றாகக் கேட்டதல்லவா! 

அஸ்ஸலாம் அலைக்கும்! என்றால் இது அராபிய மொழியில் “மாலை வணக்கம்!” அல்லது மிகச் சரியாக சொல்வதென்றால் “உங்கள் மீது சாந்தியும் சமாதானமும்  உண்டாகட்டும்”

Saydati! Sadati ! 

அம்மணிகளே! ஐயாமார்களே!

நான் சுருக்கமாகச் சொல்கிறேன். 

லா வுட்டோவில்லோ அலிகோம்! (La Outowillo Alikoum!)

பிரான்ஸ் ஒரு முக்கியமான தவறு செய்துவிட்டது. மிகமோசமான அநீதி, டூமூன் கபீர்! (dholumun kabir!) 

2001ம் ஆண்டு செப்டெம்பர் 11ம் திகதிக்குப் பின், “நாங்கள் எல்லோரும் அமெரிக்கர்கள்” என்று சிலர் சொன்னார்கள்.

நான் இன்று சொல்கிறேன்: 

கொலோனா அராப்! (Koulouna Arab!) நாங்கள் எல்லோரும் அராபியர்கள்! 

கொலோனா முஹாஜிரோன்! (Koulouna muhajiroun!) நாங்கள் எல்லோரும் புகலிகள்! 

அவர்களுடைய கௌரவத்தின் மேல் கை வைக்குமளவுக்கு நாங்கள் நடந்துகொண்ட முறையினால் எங்களுடைய ஆன்மாவையும் கௌரவத்தையும் நாங்கள் இழந்துவிட்டோம். நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் ‘கராமதூனா’ (karamatouna).

நான் தேர்தலில் மீண்டுமொரு தடவை தெரிவு செய்யப்படமாட்டேன் என்று எனக்குத் தெரியும். அது எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும். நான் தேர்தலில் நிற்கப் போவதில்லை. பிரான்ஸை திரும்பவும் மீட்டுக் கொண்டு வந்து வைப்பதற்கு, இதனை சிலர் ஏற்றுக்கொண்டு செயற்படுவார்கள் என்னும் நம்பிக்கையோடு, நான் அரபுக் கலாச்சாரத்திற்கும் அரபு மொழிக்கும் மரியாதை செலுத்துகிறேன். 

அஸ்ஸலாம் அலைக்கும்! யாஹ்யா பிரான்சா! யாஹ்யா அல் மக்ரெப்!

(Assalām Alikoum! Yahya França! Yahya al Maghreb!)

சந்திப்போம்! பிரான்ஸ் வாழ்க! மக்ரேப் வாழ்க!


1. Abricot; 2. Alcool; 3. Café; 4. Safran; 5. Soda; 6.Sorbet; 7. Cheque; 8. Guitare; 9. Algèbre 10.Chimie; 11. Amalgame; 12. Zenith; 13. X; 14 . Azurதாஹர் பென் ஜெல்லோன்

பிரெஞ்சு-மொரோக்க எழுத்தாளர், La Nuit Sacrée என்னும் நூலுக்கு 1980இல் கிடைத்த Goncourt விருதுக்குப் பின்பு பரவலாக பிரான்சில் அறியப்பட்டவர்.

இவர் 1944இல் Fes இல் பிறந்து தன் இளமைக்காலத்தை Tangerஇல் வாழ்ந்தார். இவர் தத்துவவியலாளர். இவர் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது இராணுவமுகாமில் 18 மாதம் தடுப்புக்காவலில் இருந்தார். அங்குதான் இவர் எழுதத் தொடங்கினார்.

1971இல் ‘பாரிஸிற்கு வருகிறார். அங்கு அவர் விஞ்ஞானத்தில் தனது பட்டப்படிப்பைத் தொடருகிறார். தன்னுடைய பட்டப்படிப்பை முடித்துவிட்டு மூன்று வருடங்களில் மீண்டும் தனது நாட்டுக்குத் திரும்புவதாகத்தான் இருந்தார். 1972இல் தனது முதலாவது கவிதை தொகுட்பையும் அதைத் தொடர்ந்து Hamoudi என்னும் நாவலையும் வெளியிடுகிறார். அடிக்கடி Le Monde இல் எழுதி வந்தார்.

இவர் ஒரு சமூக அக்கறையுள்ள புத்திஜீவியாகத் தன்னை அடையாளப்படுத்துகிறார். இவர் இங்குள்ள இனவாதம் மற்றும் பாரிஸின் சுற்றுநகரங்களில் (நிறவாதத்தை மையப்படுத்தி) நடைபெறும் பிரச்சினைகள் தொடர்பாகத் தொடர்ந்து தனது எதிர்ப்பைத் தெரிவித்து வந்திருக்கிறார். செச்செனியா மற்றும் அல்ஜீரியா தொடர்பாகக்கூட இவர் மிகவும் அக்கறையாக கருத்துகள் தெரிவித்திருக்கிறார். ஆனால் இரண்டாம் ஹாஸனின் ஆட்சியின் போதிருந்த மொரோக்கோவின் இருண்ட காலங்கள் தொடர்பாக எந்த அபிப்பிராயங்களையும் தெரிவிக்கவில்லை. இவரது இந்த மௌனம் இவருடைய Cette aveuglante absence de lumière நூல் வெளியீட்டின்போது நிறைய வசைகளைப் பெற நேர்ந்தது. இவருடைய அநேகமான நூல்கள் மொரோக்கோ சமூகத்தினரில் சிலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
குறிப்பு: இந்த மொழியாக்கம் 24வது உயிர்நிழல் (யூலை-செப்டெம்பர் 2006) சஞ்சிகையில் வெளியாகியது. ‘கிரிந்தி மணி’ என்னும் புனைபெயரை பாவித்து இருந்தேன். இன்று 15 வருடங்களின் பின்னர் பார்க்கும்போது திருப்தியாக இருக்கவில்லை. அதனால் சில திருத்தங்கள் செய்திருக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s