அச்சக் கதறல் – க்ளோடியா சலஸார் ஹிமெனெஸ் (Claudia Salazar Jiménez)

மொழியாக்கம்: லக்ஷ்மி
மூலம்: ஆங்கிலம்

“நரகம் என்பது தனக்கென எந்த விதமான எல்லைகளையோ அன்றி ஒரு தனி இடத்தையோ  வகுத்துக்கொண்ட ஒன்றல்ல. நாங்கள் எங்கிருக்கிறோமோ அது நரகம். நரகம் எங்கிருக்கிறதோ அங்கு நாங்கள் என்றும் இருந்தாக வேண்டும்.” 

கிறிஸ்தோபர் மர்லோ – டாக்டர் ஃபௌஸ்டஸ்

(Christopher Marlowe – Doctor Faustus)

காலைப்பொழுது. 

கட்டிலில் படுத்திருக்கும் அவளுக்கு, தனது உடல் வழமையை விடவும் கனதியாக இருந்தது போல உணர்ந்ததால், போர்வைக்குள் இருந்து வெளியே வருவது  சிரமமானதாக இருந்தது. அவளுடைய கைகளிலும்  கால்களின் மயிர்க் கணுக்களிலும் பெரும் பாரம் அழுத்துவது போல உணர்ந்தாள். அவள் தனது கையினால் வலது கண்ணை மூன்று தடவைகள் மெதுவாக தேய்க்கிறாள். அவளுடைய முழங்கை கணவனுடைய முதுகுப் புறத்தை உரசுகிறது. அவன் மெதுவாக அசைகிறான். அவனது உடல் போர்வைக்குள் அமிழ்ந்தது. சலனம் எதுவும் இல்லை. ஒரு மெதுவான முனகல். 

சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழும்புவதை யாரும் விரும்புவதில்லை. அவள் தனது மறு கண்ணை இன்னும் மெதுவாக தேய்க்கிறாள். அவள் காலை உணவிற்கு தேவையான பாணும் வேறு சாமான்களும் வாங்குவதற்கு வெளியே போக வேண்டும். ஆனால் அவளுக்கு படுக்கையை விட்டு எழும்புவதற்கு மனமில்லாமல் இருந்தது. உடனே எழும்புவதை அவள் உள்ளூர விரும்பவில்லை. 

எனது ஒழுக்கக் கட்டுப்பாடு எங்கே போய்த் தொலைந்தது? 

அவள் மீண்டும் போர்வைக்குள் சுருண்டு கொள்கிறாள். பின்னர் அவள் ஒரு பாதத்தை போர்வைக்கு வெளியில் மெதுவாக நீட்டிப் பார்க்கிறாள். அப்போது நவம்பர் மாதத் தொடக்கத்தின் சில்லிடும் குளிரை அவள் உணர்கிறாள். உடனடியாக தனது பாதத்தை திரும்பவும் உள்ளே இழுத்துக் கொள்கிறாள். போர்வையின் மென்மை தரும் சுகத்தை அனுபவிக்கிறாள். குளிராக இருக்கிறது. ஆனால் புனாவின் (சிலிக்கும் ஆர்ஜென்டினாவுக்கும் இடையில் இருக்கின்ற மலைசார் நிலப்பரப்பு) குளிருடன் இதனை ஒப்பிட முடியாது. இந்த நினைப்பு அவளுக்கு ஆறுதலாக இருக்கிறது.

காலைப்பொழுதை நினைவகற்ற அவளது இமைகள் கண்களை மெதுவாக மூடுகின்ற தருணம் அலறிமணியின் பச்சை நிற வெளிச்சம் அவள் கண்கள் மீது மோதுகிறது. 

அவளுடைய மகள் இன்னும் நித்திரையால் எழும்பவில்லை என்றால், இவ்வளவு வேளைக்கு அவள் எழும்புவதில் பிரயோசனம் இல்லை. தொடைகளுக்கிடையில் நனைந்து இருப்பது போன்று அவள் உணரும்போது அவள் பெருமூச்சு விடுகிறாள். அவளுடைய கண்மடல்கள் உயர்ந்தபடி இருக்கின்றன. எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது. அது எப்போது வரும் என்று எனக்கு ஒரு நாளும் ஞாபகம் இருப்பதில்லை. அவள் படுக்கையை விட்டு மெதுவாக கவனமாக நழுவி இறங்குகிறாள். இந்தத் தடவை போர்வையில்  இரத்தக் கறை படியாமல் இருக்க அவள் தன்னால் முடிந்ததை செய்வாள். அவனுக்கு இந்தக் கறைகள்  பிடிக்காது என்பது அவளுக்குத் தெரியும். அவன் இதை பெண்களின் சமாச்சாரமாக நினைப்பதால், இது குறித்து அவளிடம் எரிச்சல் கொள்வதில்லை. இப்படியான நாட்களில் குளிர் என்பது குளிர் மட்டுமல்ல என்று அவனுக்கும்  தெரியும் . அதாவது, ஒரு மருத்துவ அவசர ஊர்தியின் அபாயச் சங்கொலி என்பதும் வெறுமனே அந்த சத்தம் மட்டுமல்ல என்பது போலத்தான். அவள் தனது கீழ் உள்ளாடையை மாற்றி விட்டு, மெதுவாக குளியலறையை நோக்கிப் போகிறாள். அநேகமாக ஒருவரும்  இப்போதைக்கு எழும்ப மாட்டார்கள். அவள் தொட்டியை நீரால் நிரப்புகிறாள். அது குளிராக, இன்னும் அதிக குளிராக இருந்ததுபோல் அவள் உணர்ந்தாள். அதனுள் தனது கறை படிந்த கீழாடையை அவள் அமுக்குகிறாள். சில நீர்க்குமிழிகள் மேலெழும்புகின்றன. அதனை பார்த்துக் கொண்டிருப்பது அவளை மனச்சோர்வடைய செய்யவில்லை, இது நகைப்புக்குரிய ஒன்றுதான். ஆனால் இப்படியே தொடர்ந்து தன்னால் இருக்க முடியாதென்று அவளுக்குத் தெரியும். தொட்டிக்குள் இருந்த நீர் முதலில் ஒரு நாண இளஞ்சிவப்பை சூடிக்கொண்டது. ஆனால் விரைவிலேயே அது நிஜமான சிவப்பு சாயலை, ஒளிரும் சிவப்பு வண்ணத்தை கைப்பற்றுகிறது. வலது கையை அவள் தனது வயிற்றின்மீது வைக்கிறாள். வயிற்றுவலியின் துடிப்பை அமுக்கி பிடிக்கிறாள். அவள் தனது கீழாடையை இடது கையினால் தொட்டிக்குள் நசுக்குகிறாள். அப்படியே கீழே பிடித்திருக்கிறாள். ஏறக்குறைய அது இவளை உதைக்கிறது போல இருக்கிறது. 

அந்தப் பெண் என்னிடம் கெஞ்சியது நினைவிருக்கிறது. 

அது உயிர்…. என்று அவள் சொல்கிறாள், 

அது இல்லையென்றால்…. 

தயவு செய்து…. 

அவர்கள் என்னை கவனமாக அவதானிக்கிறார்கள்; 

அவர்கள் எல்லோரையும் இப்படித்தான் பார்ப்பார்களா? அல்லது 

அவர்கள் எச்சரிக்கையுடன் இருந்தார்களா? என்பது 

எனக்கு எப்போதுமே தெரிந்ததில்லை. 

சந்தையில் வாங்கிய கோழியின் கழுத்தை வெட்டும்போது துடிப்பது போல்,  இந்தத் தடவை, உள் கீழாடை உதைக்கவில்லை. அவள் அந்த வார இறுதிக்கான மதிய உணவைப்பற்றி யோசிக்கிறாள். அவள் தனது வயிற்றுக் குமட்டலை அடக்குகிறாள். அவள் தனது உள் கீழாடையை  எடுத்து உதறுகிறாள். அதன் மீது காலை வெளிச்சம் படும்படியாக அதை உயர்த்திப் பிடிக்கிறாள். பெரும்பகுதி இரத்தம் கழுவப்பட்டுவிட்டது. ஆனால் எப்போதும் போல கரையில் ஒளிவட்டம் போன்ற ஒரு அடையாளம் எஞ்சி இருந்தது. அதை அழிப்பதற்கு அவளுக்கு ஒரு சவர்க்காரக்கட்டி வேணும். ஆனால் அந்தக் கறையை அவள் அழிக்க விரும்பவில்லை. இரத்தத்தை ஒருபோதும் வீணாகும்படியாக பிரித்திடக் கூடாது. 

கறுப்பி, அவளுடைய செல்ல நாய், விழித்துக்கொண்டு விட்டது. காலைப்பொழுதின்  மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வாலாட்டியபடி கறுப்பி  அவளை நெருங்குகிறது. அவள் கறுப்பியின் முதுகில் தடவியபடி அதனுடைய கழுத்தில் இருக்கும் அழகான புள்ளியை தேடுகிறாள். அப்போது அதன் சுவாசக் குழாயின் அழுத்தம் அதிகரிப்பதை அவளும் உணருகிறாள். அவளுடைய விரல்கள் கறுப்பியினுடைய தோல் மயிருக்குள் அழுந்துகின்றன. சுவாசிப்பதற்கு போதிய அளவு காற்று இல்லாதது போல் நாய் முனகுகிறது. 

நான் அவளை போதுமானளவு கசக்கி பிழிந்தேன். 

என்னால் இயலாமல் போகும்வரையும் அவளை கசக்கிப் பிழிந்தேன். 

அப்போது என்னிடம் கெஞ்சுவதை அந்த பாவப்பட்ட பெண் நிறுத்தினாள். 

அவர்கள் என்னை நம்பத் தொடங்கினார்கள். 

இப்படித்தான் என்னால் மேலும் பல விடயங்களை அறிய முடிந்தது. 

அது எனக்கு கொடுக்கப்பட்ட வேலை. 

அவள் தன்னுடைய கிடுக்குப் பிடியை விடுவித்தபொழுது, நாய் தனது காதுகளை தொங்கவிட்டுக்கொண்டு அவளை சந்தேகத்துடன் பார்த்தபடி விலகிச் சென்றது. நாய் மீண்டும் அவளிடம் நெருங்கி வருவதற்கு முயற்சி செய்கிறது. ஆனால் போவதா இல்லையா என்று யோசிக்கிறது. எச்சரிக்கையுடன் இருக்கிறது. அது திரும்பி வரும். திரும்பவும் அவள்மீது  நம்பிக்கை கொள்ளும். அச்சங்கள் விரைவில் மறக்கப்பட்டுவிடும். 

அவள் உடைகளை மாற்றுவதற்காக மீண்டும் படுக்கையறைக்குள் செல்கிறாள். பாண் மற்றும் காலை உணவிற்குத் தேவையானவை எல்லாவற்றையும் வாங்குவதற்கு அவள் வெளியே போக வேண்டும். மத்தியானச் சாப்பாட்டுக்கு கோழி. சரி அதைப்பற்றி அவள் பிறகு யோசிக்கலாம். இப்போது பாணுக்காக போக வேண்டும். தூரத்தில் எங்கேயோ மருத்துவ காப்பூர்தியினதும் காவல்துறை வண்டியினதும்  எச்சரிக்கை ஒலிகள் சனிக்கிழமை காலையின் அமைதியை ஊடறுத்து செல்கின்றன. வீதியில் வண்டிகள் ஓரமாக விலகி பாதை அமைத்து கொடுக்கின்றன. அது ஏற்கனவே ஓரளவு கணித்து வைக்கப்பட்ட உரத்த இரைச்சல்தான். வழக்கமான இந்த அலறிக் கூவல் இல்லாமல் நகரம் வழமைபோல் இருந்திருக்காது. அவன் தனது கண்களை திறந்தான். வெளியே போவதற்கு உடுத்திக்கொள்ள தயாராக அவள் அறைக்குள் உலாவுவதை அவன் பார்க்கிறான். 

திடீரென்று அவன், “நீ போறதென்று முடிவெடுத்திட்டியா?” என்று அக்கறையுடன் கேட்கிறான்.

“நான் பாண் வாங்கத்தானே போறன் . போறதும் வாறதும்தான். உடனே வந்திடுவன். கன நேரம் எடுக்காது.” 

அவனுக்கு சந்தேகமாகவும் இருக்கிறது. கடைசியாக எல்லாமே நடந்து முடிந்த பிறகு, அவன் இப்போது அவளை இரண்டு வருடங்களிற்குப் பிறகு பார்க்கிறான். நடந்தவற்றினால் ஏற்பட்ட பாதிப்புகள் இல்லாமற் போவதற்கு  நாட்கள், மாதங்கள் என்ற கணக்கில்லாமல் இன்னும் அதிக காலம்கூட எடுக்கலாம் என்று அவர்கள் அவனிடம் சொன்னார்கள். அவர்கள் இராணுவத்தில் இருந்து வெளியேறுவதற்கான பாராட்டும் ஊக்க சம்பளமும் கொடுக்கப்பட்டது. அதனை அவர்கள் முறையாக நிர்வகித்தார்கள். அவர்களின் பாதுகாப்பு குறித்த எதிரிகளின் பழிவாங்குதலை தவிர்ப்பதற்கு இதுதான் மிகச் சிறந்த வழி என்று இவர்களிடம் சொல்லப்பட்டது. எனினும் இவைகள் குறித்து கவலைப்பட்டு காலத்தை வீணடிக்க வேண்டியதில்லை.  அவளுடைய பணி நடவடிக்கையின்போது என்ன நடந்தது என்பது குறித்த விபரங்களை அவனிடம் சொல்வதற்கு அவள் என்றுமே விரும்பவில்லை. (அவளால் முடியவும் இல்லை அல்லது கட்டாயம் சொல்லத்தான் வேண்டுமா?) அவனுக்கு அது குறித்து தெரிய வேண்டிய  அவசியமில்லை. ஒரே சம்பவங்கள் திரும்பத் திரும்ப நடந்தபடி இருந்தன. தாங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவன் முடிவு செய்கிறான். //காலம் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும்// அவர்கள் மருத்துவ அறிக்கையில் அப்படி எழுதினார்கள். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து அவன் தனது கணிப்பீடுகளை கணக்கிட்டுக் கொள்வான்.

“உண்மையாகத்தான் சொல்கிறாயா?” அவன் கேட்கிறான். கட்டிலில் இருந்து கீழே இறங்குவதற்கு தயாராக இருக்கிறேன் என்பதுபோல, அவன் படுக்கையில் எழும்பி இருந்துகொண்டு “நானும் உன்னோடை வரலாம் என்று நினைக்கிறேன்” என்கிறான். 

“எனக்கு ஒண்டும் பிரச்சினை இல்லை. நீ ஒண்டும் யோசிக்காமல் படு. பாண் மட்டும்தானே வாங்கோணும்” 

அவன் தடுமாறுகிறான். ஆனால் சரி என்று சமாளித்துக் கொள்கிறான். அவள் உடை அணிந்து தயாரானபோது அவன் போர்வையின் இதமான சூட்டிற்குள் நுழைந்து கொள்கிறான். அவள் எளிதில் உடைந்து போகக் கூடிய நிலையில் உள்ள ஒரு வலிமை குன்றியவள் போல் அவனுக்குத் தெரிகிறாள். இது ஒரு மாயத் தோற்றம் என்று அவனுக்கு தெரிந்திருந்தாலும்… இவ்வளவு வலிமையற்ற ஒருத்தியால் இத்தனை  சவால்களை எதிர்கொண்டு வந்திருக்க முடியாது. அவளது உடல் தனிச் சிறப்பு வாய்ந்தது. அவன் அவளைக் காதலிக்கிறான். வேறெவரை விடவும் அவன் அவளை அறிந்து வைத்திருக்கிறான். அவர்களின் பிரிவின் தாக்கத்தை இருவரும் சமாளித்திருந்தார்கள். அப்போது அவளுக்கு என்ன நடந்தது? ஒரு புதிய நாட்டில் இருவரும் இணைந்து ஒரு வாழ்க்கையை தொடங்குவது என்றாயிற்று. அங்கு மொழி புதிது. வாழ்க்கை முறை புதிது. மகளும் இருக்கிறாள். இந்தத் தடவை எந்த விதமான இடைஞ்சல்களும் இருக்கக் கூடாது என்று அவன் மனமார விரும்புகிறான். கவலைப்படத் தேவையில்லை. இந்தத் தடவை வாழ்க்கை வேறு விதமாக இருக்கக்கூடும். அவன் அப்படித்தான் நம்புகிறான். 

பாண் கடை அருகில் தான் இருக்கின்றது. ஒரு ஐந்து கட்டிடத் தொகுதிகளைத் தாண்டினால் போதும். ஒரு மூலையில் கூட்டமாக குவிந்து இருக்கின்ற புறாக்களை மகிழ்ச்சியுடன் பார்த்து ரசிக்கிறாள். நேற்றிரவு பெய்த மழையில் பாதையில் இருந்த ஒரு பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. புறாக்களுக்கு அது ஒரு சிறிய பாலைவனச் சோலையாகியது. அவள் தனக்குத் தாகமாக இருப்பதாக எண்ணுகிறாள். எப்பொழுதும் தாகம். அவளால் பசியை தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் தாகம் அவளுடைய தொண்டையை நெரித்தது. நாக்கு எரிந்தது. தண்ணீர் விடாய் அவளை செயலிழக்கச் செய்தது. 

அவளுக்கு ஒரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது. அப்போதைக்கு அவர்களிடம் இருந்த தண்ணீர் முடிந்துவிட்டது. அவர்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு தோழன் மிக மோசமாக நோய்வாய்ப்பட்டிருந்தான். அவனால் அவர்களுடன் செல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் தொடர்ந்து நடந்தார்கள். அவனை  அப்படியே விட்டுவிட்டு முன்னோக்கி நகர்ந்தார்கள். மங்கிப் போயிருந்த அவன் கண்களை அவள் பார்த்தாள். அவன் தனக்கென்று எதையும் கேட்கவில்லை. அவன் தானாகவே அவர்களில் இருந்து விலகுகிறான். அவளும்கூட எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு தடவையும் அவர்களில் யாரோ ஒருவர் மரணிப்பதை பார்க்கும்போது அவள் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தாள்.

அவர்கள் எனது மகிழ்ச்சியை கவனிக்காமல் இருப்பதற்கு நான் அதனை வெளிக்காட்டாமல்  இருக்க முயற்சி செய்ய வேணும். எனது பணி நடவடிக்கையின்போது அவர்களைக் கொலை செய்வதற்கு எனக்கு அனுமதி இல்லை. நான் அவர்களிடம் இருந்து முடிந்த அளவிற்கு தகவல்களை பெற வேண்டும். ஆனால் அவர்களைக் கொல்ல முடியாது. அப்படிச் செய்வதற்கு நான் எதைக் கொடுக்க வேண்டி இருந்திருக்கும்.

இப்போது அவளால் தண்ணீர் விடாயை தாங்க முடியவில்லை. அவளால் குரல் எழுப்ப முடியவில்லை. அந்தப் புறாக்கள் சேறாகியிருந்த அந்த சின்னக் குட்டையில் குளித்துச் சிறகடித்தன. அவளுக்கு அது அருவருப்பான செயலாக இருந்தது.

பாண் கடையில் அவள் வழக்கமாக வாங்குபவற்றை எடுக்கிறாள். நிறையப் பேர் அங்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவளுக்கு வரிசையில் நிற்க முடியாது. காத்திருப்பதை அவள் வெறுக்கிறாள். சுருள் பாண்களுடன் வேறு சில பொருட்களையும் வாங்குகிறாள். அவளுக்கு ஒரு அருவருக்கத்தக்க உணர்ச்சி தோன்றுகிறது. பாண்கள் இருந்த பையை அவள் தனது நெஞ்சோடு அழுத்திப் பிடிக்கிறாள். அங்கிருந்து அவசரமாக வெளியேறுகிறாள். கையில் கோப்பிக் குவளையுடன் இருந்த ஒருவர்மீது இலேசாக மோதுப்படுகிறாள். 

வெளியே வீதிக்கு வந்ததும் திரும்பவும் அந்தப் புறாக்களை காண்கிறாள். இப்போது இன்னும் பல புறாக்கள் சேர்ந்துவிட்டன. அவை தங்கள் மீது படிந்திருக்கும் உண்ணிகளுடன் சேற்றுக் குழிக்குள் இறங்கி சிறகடிக்கின்றன. அவை தாகம் குறித்த எந்த சிந்தனையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை. அவள் ஒவ்வொரு அடியாக முன்னேறுகிறாள். புறாக்களின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டு செல்வதுபோல் இருக்கின்றது. 

அவள் நிற்கிறாள். இரத்தம் கீழே ஒழுகுவது அவளுக்கு நன்றாகத் தெரிகிறது. இரத்தம் சூடாக வடிந்து  சென்று வெளியேறுவதை அவள் உணர்கிறாள். அவளுடைய உடலை விட்டு வெளியேறும் குருதி உறிஞ்சப்படுகிறது. ஆனால் அது இன்னொரு இரத்தக்கறையை விட்டுச் செல்லப் போவதில்லை. தனது யோனியின் துளையானது தகர்வது போல அவள் உணர்கிறாள்; எதற்குமே பாதுகாப்பில்லை. எதுவுமே பாதிப்படையக் கூடியவை. ஒரு மென்மையான சீலைத் துணி. ஒரு சாதுவான வலி. அந்தச் சாலை நெடுகிலும் விரைந்து சென்று கொண்டிருக்கும் கார்கள் யாவும் அவளைக் கீழே தள்ளுவதற்கென்று முன்னேறிக் கொண்டிருப்பது போல் அவள் உணர்கிறாள். அவளுக்கு அந்தச் சாலை ஒரு காட்டு நிலமாக உருவெடுக்கிறது. 

திடீரென்று அவளது தொண்டை வரண்டு  போகிறது. மீண்டும் அவளுக்கு தாகம் வருவதை உணர்கிறாள். அந்த தாகம், அது தருகின்ற வேதனை. அவள் நடுங்கியபடி அந்தச் சாலையின் நடுவில் முன்னும் பின்னுமாக நகர்ந்துகொண்டு இருக்கிறாள். யாரோ ஒரு வழிப்போக்கன் அவளை ஒரு கணம் உற்று நோக்குகிறான். 

அது இலையுதிர் காலத்தின் அமைதியான ஒரு காலைப்பொழுது. நவம்பர் மாத முற்பகுதி. அவளுடைய வயிற்றில் ஒரு கதறல்/கூக்குரல் உருவாகத் தொடங்கி அவளது தொண்டையை நோக்கி மேல் நகர்ந்து கக்குவது போல், அந்த நகரம் எல்லாவற்றையும் வெளியே தள்ளுவது போல் இருக்கின்றது. அவளுடைய அச்சங்கள் அந்தக் கதறலுடன்  ஒட்டிக் கொண்டன. கடைக்காரர்களின் வாக்குவாதங்கள், காவல்துறை வண்டிகளின் எச்சரிக்கை சங்கொலிகள், கார்களின் ஹார்ன் சத்தங்கள் அனைத்தும் சேர்ந்த ஒரு கச்சேரிக்கு நடுவில், அவளுடைய கதறலும் ஒரு இடத்தைப் பிடிக்க முயற்சிக்கிறது. அவளுடைய கலவரம் கூடிக்கொண்டு போகிறது. அவளுடைய கால்கள் நெடும் தூரம் ஓடுவதற்கு விரும்புகின்றன. ஆனால் அவளுடைய உடல் பாதையோர சதுக்கத்தில் நிலையாக அசையாமல் இருக்கின்றது. அவளில் இருந்து வெளியேறுகின்ற குருதி அவளை நகர முடியாதபடிக்கு பிணைத்து வைத்திருக்கின்றது. அவளது நுரையீரலை பயம் நிரப்புகின்றது. அவளுடைய கால்கள் அதிபாரத்தை சுமப்பதுபோல் அவள் உணர்கிறாள்.

முன்னைய இரவுப் பொழுதுகள்  ஒன்றினுள் அவள் நினைப்பு ஆழமாக ஊடுருவுகிறது. அந்த இரவில் அவர்கள் முதலில் ஒரு குக்கிராமம், அதற்குப் பின்னர் இன்னொன்று என்று தொடர்ந்து சென்றபடி இருந்தார்கள். அப்படி எத்தனை காலம் அதில் கழிந்து போனது என்றுகூட அவளால் கணிப்பிட்டுக் கூற முடியாதளவுக்கு அவளால் உணர முடியாதிருந்தது. ஒரே விதமான கட்டளைகளை பெறுவதும், ஒவ்வொரு பிரகடனங்களிற்கும் ஒரே விதமான பதிலை தெரிவிப்பதும் அவளுக்கு வழக்கமாகிப் போனது. கட்சி, புரட்சி, இரத்தம் – அனைத்தும் ஒன்றாக இறுகிப் பிணைந்தன. அந்தப் பயணத்தின் ஒரு கட்டத்தில் அவர்கள் சில குகைகளை கண்டபோது, அங்கு அவர்கள் இரவில் தங்கக் கூடியதாக இருந்தது. வலியில் முறுகிய அவளது நரம்புகள், அந்த அச்சக் கதறலின் கனதியை அவளுக்கு உணர்த்தின. அதிலிருந்து தப்பிப்பதற்கு அவளால் முடிந்திருக்கவில்லை. ஒரு தோழர் அவளது முதுகில் ஓங்கி பலமாக அறைந்தார். முதல் முறையாக அவள் இப்படி அறை வாங்குகிறாள். அவளுடைய மிக மோசமான முதல் அனுபவம். அவளுக்கு அது இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. அவனை முடித்துவிடுங்கள் என்று அவர்கள் கட்டளையிட்டார்கள். அவனைப் பார்ப்பதற்கு அவள் விரும்பவில்லை. தனது அச்சக் கதறலை வெளியேறாது அவள் கட்டுப்படுத்திக் கொண்டாள். அவர்கள் அனைவரின் மீதும் துப்பாக்கிக் குண்டுத் திவலைகள் தெறிக்க வேண்டும் என்ற அவளது ஆசையை  கட்டுப்படுத்திக் கொண்டாள். தன்னால் அமுக்கப்பட்ட அச்சக் கதறலுக்கும் ஒரு குண்டைப் போடுவதையும் சேர்த்து கட்டுப்படுத்துகிறாள்.

அவளுடைய நிறம் மங்கிக்கொண்டு போகிறது. அவள் காற்றில் மிதப்பதுபோல் உணர்கிறாள். அவளுடைய மூச்சுக் காற்று வெளியேறுகின்றது. அதே சமயம் அவளது முதுகு சிறிது வளைகின்றது. மூச்சுக் காற்றின் அதிர்வு அதிகரிக்கின்றது. அவளைக் கடந்து செல்பவர்கள் ஒவ்வொருவரையும் அது ஊடுருவி செல்கின்றது. வானளாவிய உயர்மாடிக் கட்டிடங்கள் பெருமுழக்கம் இடுகின்றன. யன்னல்கள் அதிர்ந்து நடுங்குகின்றன. எவராலும் அவளை உற்றுப் பார்க்காமல் கடந்து செல்ல முடியவில்லை. அவள் கதறுகிறாள். அவள் தொடர்ந்து கதறுகிறாள். ஏதாவது ஒரு சம்பவம் அவள் நினைவுக்கு வருகிறதா? 

அவன் ஒரு இராணுவ உத்தியோகத்தனாக இருந்தான். திடீர் படையெடுப்புக்குப் பின்னர் உயிர் தப்பி இருக்கும் கடைசி மனிதன் அவன். அது ஒரு எதிர்பாராத  தாக்குதல். அதனால், அவர்களுக்கு முன்னெச்சரிக்கை தருவதற்கு அவளால்  முடியவில்லை. எச்சரிப்பது அவளுடைய வேலை இல்லை என்பதனால் மட்டும் அல்ல. அங்கு பிரசன்னமாய் இருப்பது அவள் வேலை. எல்லாவற்றையும் அவதானித்து உள்வாங்கிக் கொள்ளுதல், ஏனையவர்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வதற்கான முயற்சி,  பணி புரிபவர்களின் படிநிலை உயர்வு, தகவல்களுக்கு மேல்  தகவல்கள், அவர்களை ஒரு முடிவுக்கு கொண்டு வருவது என்று எல்லாவற்றுக்குமாகவும், அவர்கள் முறியடிக்கப்படும்வரை அந்த இடத்தில் இருந்திருக்க வேண்டியது அவள் பணி. இதற்கெல்லாம் எவ்வளவு காலம் எடுக்கப்போகின்றதென்று எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

ஆனால் குறிப்பிட்ட அந்த நாளில் முதல் அடியை எடுத்து வைப்பதற்கான சந்தர்ப்பம் அவளுடையதாக இருந்தது. அது வழமையாக மேற்கொள்ளப்படுகின்ற ஒரு உத்தி என்பது அவளுக்குத் தெரியும். இராணுவ உத்தியோகத்தன்  அவள்மீது  பாய்ச்சிய வெறுப்பு அவளைச் சூழ்ந்திருந்தது. அதாவது, அவனுடைய கபாலத்தை ஊடுருவிய துப்பாக்கிக் குண்டினால் தெறித்த அவனது குருதி அவளுடைய மூடுகாலணிகளில் தெறித்துப் படிந்தது போன்றது. அவன் இடத்தில் அவள் இருந்திருந்தால்… என்று அவள் நினைத்தாள். அவளுடைய பணியின் படிநிலையும் அந்த இராணுவ உத்தியோகத்தனின் படிநிலையாகவே இருந்தது. இன்னொரு தோழன், புரட்சி என்பது குருதி பாய்ச்சி  விளைய  வேண்டும் என்பதை அவளுக்கு மீண்டும் நினைவுபடுத்தி, வாழ்த்து உரையொன்றை நிகழ்த்தினான். தனது தொண்டைவரை ஏறி வந்து குடியிருந்த தனது அச்சக் கதறலை அவள் விழுங்கிக் கொண்டாள். ஆனால் அந்தக் கதறலை தன்னில் இருந்து தப்பிக்க வைக்க அவளால்  முடியவில்லை. அவளுக்கு நித்திரை கொள்ள வேணும் போல் இருந்தது. குகையினுள் படிந்திருந்த குளிர்கூட அவள் கவனத்தை திசை திருப்பவில்லை. ஆனால் அந்த இராணுவ உத்தியோகத்தனின் பார்வையில் இருந்து அவள்மீது படிந்த வெறுப்பு அவளைத் தூங்க விடாமல் தடுத்தது.

துப்பாக்கிக் குண்டு, குருதி, அச்சக் கதறல் எல்லாம் கலந்து போயிருந்த அந்தக் கணத்தின் நேர நீட்சியை அவளால் என்றைக்குமே கணிக்க முடிந்திருக்கவில்லை. அந்தக் கணத்தினை மறந்து போவதற்குத்தான் அவள் விரும்பினாள். ஆனால் அவளுடைய விருப்பம் நிறைவேறவில்லை. முதல் தடவை இப்படி நடந்தபோது, அவளுக்குத் தோன்றும் அந்த விம்ப படிவை இல்லாமலாக்க அவள் ஒரு கல்லை பயன்படுத்தினாள். பின்னர் அவள் தனது மூடுகாலணிகளின் அடிப்பகுதியாலும்  முயற்சித்துப் பார்த்தாள்.  ஆனால் அதுவும் விரும்பிய விளைவைத் தரவில்லை. அச்சக் கதறல் தொடர்ந்தபடியே இருந்தது. அதனை தனக்குள் ஒரு வடுவாக  புதைத்து விட அவள் விரும்பினாள். 

நிலப் பரப்பில் இருக்கின்ற மிகச் சிறிய வெடிப்புகளை பொருத்தி சரி செய்வதென்பது தெரிந்த ஒரு விடயம், ஆனால் அவளுடைய உடற்கூற்றில் படிந்திருக்கும் பிளவுகளை எப்படி சரிப்படுத்த முடியும். அதாவது  பை நிறைய இருந்த சுருளப்பங்களை நெருக்கி நொறுங்கிப்போனால் எவ்வாறு மீளப் பெற முடியாதோ, அதைப் போன்றதுதான் அவளின் நிலைமை. 

இராணுவ உத்தியோகத்தனின் அந்தக் கண்கள். கடந்து வந்த ஆண்டுகளில் எத்தனையோ கண்களை அவள் கண்டிருக்கிறாள். அவைகள் குறித்து எதையும் அவள் நினைத்துப் பார்க்க விரும்பவில்லை. இப்போதும் அச்சக் கதறல் மேலெழுகின்றது. அவள் அந்த கதறலை வெறுக்கிறாள். ஆனால் அது அவளை ஆறுதல்படுத்தவும் செய்கிறது. பயம் அவள் உடலை சுற்றிச் சூழ்ந்து கொள்கிறது. மோட்டார் வண்டிகள் கடந்த காலத்தை பூதாகரமாக்குகின்றன. அவளுடைய குரல் நாண்கள் அவளைத் துளைக்கின்றன. அவள் அந்த இராணுவ உத்தியோகத்தனின் கண்களையும், ஏனைய அனைத்துக் கண்களையும் தனது கதறலுடன் சேர்த்து வாந்தி எடுப்பதற்கு விரும்புகிறாள்.  

என்ன செய்வதென்றறியாது சிலர் அவளை நோக்கி வருகிறார்கள். அவளை அவர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள் அல்லது அந்தப் புறாக்கள் அவளை சூழ்கின்றனவா? டாக்சிகள், கட்டிடங்கள், மனிதர்கள், புறாக்கள் இவற்றின் நெரிசல். அந்தக் கதறல் தொடர்கிறது. அது முடிவற்றது போல் இருக்கின்றது, ஒரு விலங்கின் கர்ச்சனை செவிப்பறைகளை உடைத்து சிதறுகின்றது போல் இருக்கிறது. அவளுடைய பணியில் இருந்து திடீரென்று அவளை வெளியேற்றுகிறார்கள்.  மற்றுமொரு புலனாய்வு குழு சிறைப்படுத்தும் பணியை கவனித்துக் கொள்கிறது, அது இராணுவம் அல்ல, ஆனால் காவல்துறை. அவள் திரும்பிப் போவதற்கான நேரம் வந்துவிட்டது. அவளுக்கு பொதுவான குற்ற உணர்ச்சி ஒன்று இருந்தது. இராணுவ பட்டாளமும் அவளுடைய குருதி தோய்ந்த உடலும் தனிமைப்படுத்தப்பட்டு ஏற்பட்ட வேதனைக்குள் அவள் உள்நுழைந்தபோது அவளுடைய அச்சக் கதறல் என்றைக்குமில்லாதவாறு கரகரப்பானதாக உச்சத்தை தொடுகிறது. அவள் பலவற்றால் சூழப்பட்டிருந்தாள், அவளுடைய பணியேற்பின் இறுதி நாள் என்பதைப்போன்று அவளை சூழ்ந்து கொண்டிருந்தார்கள். மீண்டும் குருதி. அப்படி வெளியே வருவதுபோல உணர்வதை அவள் விரும்புகிறாள். அது அவளை துன்புறுத்தினாலும்கூட, அது அவளை தூய்மைப்படுத்துகிறது. இங்கு ஒரு பிரச்சினையும் இல்லைத்தானே? இதை கேட்டது ஒரு காவல் துறை அதிகாரி. அவளுடைய முகம் பற்றி எரிகிறது. அவளுடைய தொண்டைக்குழி அச்சக் கூக்குரலை துண்டித்துப் போட்டது. அவளுடைய உடல் தன்னை நேராக்கியது. அவள் இன்னும் சுருளப்பங்கள் நிரம்பிய பையைத் தனது நெஞ்சின் மேல் அழுத்தியபடி இருக்கிறாள். 

“Si Estoy bien” (ஆம் நான் நன்றாக இருக்கிறேன்)

காவல் துறை அதிகாரிக்கு இது விளங்கியதா இல்லையா என்பது குறித்து அவளுக்கு எந்தக் கவலையும் இல்லை. கட்டிடங்களின் பக்கவாட்டில் நடந்து வீட்டை வந்தடைகிறாள். கறுப்பி அவளை வரவேற்கிறது. அது ஏற்கனவே நடந்ததை மறந்து விட்டது. அது மீண்டும் அவளை நம்புகிறது. அவள் நாயினுடைய மிருதுவான சூடான கழுத்தை நினைக்கிறாள். அவள் கணவன் கோப்பி தயாரிக்கிறான். அவள் எதையும் அவனிடம் சொல்லப்போவதில்லை. அவள் சுருளப்பங்கள் அடங்கிய பையை மேசை மீது வைத்துவிட்டு குளிப்பதற்காக போகிறாள். அவன் ஆழமாக மூச்சை உள்ளிழுத்தபடி பயத்துடன் மெதுவாக பையிற்கு அருகில் போய் அதனைத் திறக்கிறான். எல்லாமே நொருங்கிப் போய் இருக்கின்றன. கோப்பி மெஷின் கிரீச்சிடுகிறது. இந்தத் தடவை ஏதாவது வித்தியாசமானதாக இருக்கும் என்று அவன் உள்ளூர முழு நம்பிக்கையுடன் எதிர்பார்த்தான். ஆனால் காலம் எதையும் மாற்றவில்லை. ஒருவேளை இன்னொரு நாள் இது மாறக் கூடும். ஒருவேளை என்றைக்கும் இந்த மாற்றம் இல்லாமலும் போகக் கூடும். 

***************************************************

Claudia Salazar Jiménez

க்ளோடியா சலஸார் ஹிமெனெஸ் 

இவர் பெரூ நாட்டின் லிமா என்னுமிடத்தில் 1976ம் ஆண்டில் பிறந்தவர். இவர் சென் மார்க்கோஸ் தேசிய பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையில் பட்டமும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் இலத்தீனமெரிக்க இலக்கியத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவர். 2013ம் ஆண்டு இவர் தனது முதல் நாவலான La Sangre de la auroraவை வெளியிட்டு பரிசு பெற்றவர். இவர் தற்போது  நியூயோர்க்கில் வசித்து வருகிறார். 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s