தக்காளி – ஸஷாரி கரபாஷ்லிவ் (Zachary Karabashliev)

மொழியாக்கம்: லக்ஷ்மி
மூலம்: ஆங்கிலம்

(இந்த சிறுகதை, இன்னொரு நாட்டில் புதிதாக வாழ்க்கையைத் தொடங்கும்  வாழ்க்கைத் துணையை இழந்த ஒருவனின் அன்றாட வாழ்க்கை போராட்டத்தின் காலக்கிரம தொகுப்பு) 

யூன் 11, 2010

எனது பெயர் கிறிஸ்டோ கிறிஸ்டோவ் கிறிஸ்டோவ். நான் இங்கு என் மகளைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன். அதாவது என் மகளையும் மருமகனையும். ராடோஸ்லாவா – அது அவளுடைய பெயர், அவனுடையதல்ல. அவர்கள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் வசிக்கிறார்கள். இந்த வசந்த காலத்தில் அவர்கள் எனக்கு விசா (அயல் நாட்டு நுழைவு அனுமதி) பெற்றுத் தந்து என்னை இங்கே கூட்டிக் கொண்டு வந்தார்கள். எப்படியோ!/

நான் இந்த குறிப்பேட்டில், எனது நாட்குறிப்புகளை பதிவதற்குத் தொடங்கி இருக்கிறேன். என் மகள் இதனை எனக்குத் தந்தாள். ஒரு நாட்குறிப்பேட்டை வைத்திருக்க வேண்டும் என்பது பற்றி நெடுநாட்களாக நான் யோசித்துக் கொண்டிருந்திருக்கிறேன். ஆனால் ஒருபோதும் எதிலாவது பதிவு செய்யக்கூடியதுபோல என்னிடம் எதுவும் இருக்கவில்லை. அதுவல்ல விடயம், என்னிடம் ஒரு நாட்குறிப்பேடு இருந்து அதில் நான் எதை எழுதுவதென்று அதிசயித்துக் கொண்டிருந்தேன் என்பதல்ல. என்னிடம் நாட்குறிப்பேடு என்ற ஒன்று இருக்கவில்லை. 

இதை ஒரு பேச்சுக்குத்தான் சொல்கிறேன். என்னிடம் ஒன்று இருந்திருந்தாலும், அது எதையும் மாற்றி இருந்திருக்காது. எனக்குச் சொல்வதற்கென்று இருந்த சகலதையும் நான் எலேனாவோடு பகிர்ந்து கொண்டேன். எனவே எனக்கு அவற்றை எழுதுவதற்கான தேவை இருந்திருக்கவில்லை. ஆனால் எலேனா இப்போது சென்றுவிட்டாள். அதனால்தான் என் மகள் என்னை அமெரிக்காவிற்கு கூட்டிக்கொண்டு வந்தாள். ஏனெனில் எனது வாழ்க்கைத் துணை எலேனா மரணித்துவிட்டாள். இது எனக்கு உண்மையில் மிகவும் கடினமாக இருந்தது. அதனால்தான் நான் இப்போது இந்த குறிப்பேட்டில் எழுதுகிறேன். அது உண்மையில் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. என்னுடைய வாழ்க்கைத் துணை குறித்து நான் இங்கு பேசப் போவதில்லை. 

**

யூன் 13, 2010

நான் இங்கு எலேனாவைப்பற்றி எழுதாமல் இருப்பதற்கு முயற்சிக்கப்  போகிறேன். ஏனெனில் அவளைப் பற்றி நான் நினைக்கும்போது துயர் என்னைச் சூழ்கிறது. அத்துடன், யாரோ ஒருவர் என்றோ ஒரு நாள் இந்த குறிப்பேட்டைக் கண்டு பிடித்து வாசித்தால், அவள் எப்படியான ஒரு பெண் என்று நினைத்து அவனும் வருந்துவான். எலேனாவுக்காகத்தான். எனக்காக அல்ல. எனக்கென்ன – என்னைப்பற்றி என்ன சொல்வது? – என் மகள் என்னை இங்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாள், அவள் என்னுடைய கவனத்தை திசை திருப்புவதற்கு எண்ணியிருக்கலாம் அல்லது ஏதோ அப்படியான ஒன்றுக்காக. அவள் என்னை அழைத்திருந்தால் நான் அதற்கு மறுப்புத் தெரிவித்திருப்பேன் என்று சொல்ல முடியாது. என்னதான் இருந்தாலும் ஒருவர் தன்னிடம் வரும்படி அழைப்பதென்பது ஒரு விடயம். இன்னொரு முக்கியமான விடயம், ஒரு வாரத்தில் அவர்கள் என்னுடைய விசாவிற்கு ஒழுங்கு செய்தமை, அதனையடுத்து நீ இப்போது அமெரிக்காவில் இருக்கிறாய்… இதை நான் ஒரு முறைப்பாடாகவோ அல்லது அதைப் போன்ற ஒன்றையோ சொல்வதைப் போலல்ல.

***

யூன் 14,

என் மருமகன் ஒன்றும் மோசமானவனல்ல. அவனுக்கு ஒரு இழவும் புரியாது. என்ன கருதுகிறேன் என்றால், அவனுக்கு பல்கேரிய மொழியில் என்ன சொன்னாலும் விளங்காது. இதை நான் சொல்வதால் எனக்கு அமெரிக்க மொழி புரிகிறதென்று அர்த்தமில்லை. என்றாலும் நான் ராடஸ்லாவைத் திருமணம் செய்யவில்லை. என்ன சொல்கிறேன் என்றால், எலேனாவுக்கு பல்கேரிய மொழி புரியாதிருந்திருந்தால், அவள் பேசுகின்ற மொழியில் இருக்கின்ற ஓரிரு சொற்களையாவது கற்றுக் கொள்வதற்கு நான் என்றாவது முயற்சித்திருப்பேனா? எல்லாவற்றிற்கும் முதல் அவள் எனது மனைவி சரியா? ஆனால் என்னதான் இருந்தாலும், நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் – என் மருமகனுக்கு பல்கேரிய மொழி புரியாது. நேற்றிரவு அவன் வீட்டுக்கு வந்தான். அவன் மளிகைக் கடைக்குச் சென்று, அதை இதையென்று வாங்கிக் கொண்டு வந்திருந்தான். அவற்றை சமையலறையில் ஒழுங்காக அடுக்கி வைப்பதற்காக, நான் அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தேன். சரியா? 

அவன் சில தக்காளிகள் வாங்கிக் கொண்டு வந்திருந்தான். அங்கு பல்கேரியாவில் இருந்ததுபோல் இது வீட்டில் வளர்க்கப்படவில்லை, மண்ணற்ற நீரில் பயிரானது, நிச்சயமாக – இப்போது இதைத்தான் நான் ‘தக்காளி’ என்று சொல்கிறேன், நீங்கள் இதில் ஒரு தக்காளியை வெட்டி ஒரு துண்டை எடுத்தால், பனி கசிந்து வெளியேறும்… என்னதான் இருந்தாலும். நான் எனது மருமகனுக்கு தக்காளியை காட்டி பல்கேரிய மொழியில் “டொமாட்” என்று சொன்னேன். நான் அவனுக்குச் சொன்னேன். அவன் தனது மொழியில் “ரொமாற்றோ” என்று சொன்னான். நான் திரும்பவும் “டொமாட்” என்று சொன்னேன். அவன்  “ரொ-மா-ற்றோ” என்றான். இப்போது எனது மகள் வந்து சேர்ந்து கொண்டாள். அப்பா இது “ரொமாற்றோ”, ‘ரி’ யில் தொடங்க வேண்டும் என்றாள்.  நான் எனக்குள் “ரொ-மா-ற்றோ”, கிறிஸ்டோ, கிழவா, இப்போதுதான் நீ உன்னுடைய முதலாவது அமெரிக்கச் சொல்லை படித்திருக்கிறாய் என்று சொல்லிக் கொள்கிறேன். ஆனால் அதை உரத்து வெளியில் சொல்வதற்கு தயக்கமாக இருந்தது.  ‘டொமாட்’ க்கு ஒரு ‘ரி’ போட்டால் சரி, என்னதான் இருந்தாலும். 

யூன் 17,

சில நாட்களாக நான் எழுதவில்லை. ஏனென்றால் என்னுடைய மகள் எனக்கு ஒரு ‘சொஷுல்’ எடுத்து தந்தாள். ‘சொஷுல், சொஷுல்….’ இந்த ‘சொஷுல்’ என்னவென்று எனக்கு எதுவும் தெரியவில்லை. உண்மையிலேயே நான் என்ன நினைத்தேன் என்றால், எனக்கு ஏதாவது தடுப்பூசி போடப் போகிறார்கள் அல்லது ஒரு இதயமுடுக்கி, அல்லது ஏதோ இப்படியொன்று என்று நினைத்தேன். ஆனால் பார்த்தால், அது ஒரு இலக்கம். ‘சொஷுல்’ என்பது பல்கேரியாவில் இருந்த அடையாள அட்டை இலக்கம் போல ஒன்று. ஆனால் வித்தியாசமானது. விடயம் என்னவென்றால், எனக்கு அவர்கள் ஒரு ‘சொஷுல்’ தந்தார்கள்.  என்னுடைய ‘சொஷுல்’இன் கடைசி நான்கு இலக்கங்கள் 5447 என்று இருந்தன. நான் விரும்பத்தக்க ஒரு இலக்கமாக இருக்கிறது. நானும் எலேனாவும் 1975ம் ஆண்டில் வாங்கிய முதல் கார் ஒரு ரஷ்ய சிகளி (zhiguli). அதனுடைய உரிம இலக்கம் BV5447. விலைமதிப்பற்றது. நாங்கள் ஏற்கனவே ஒரு ‘லடா’ கார் வாங்குவதற்காக  விண்ணப்பித்திருந்தோம். ஆனால் நாங்கள் அதற்காக இரண்டு வருடங்கள் காத்திருக்காமல், அதற்குப் பதிலாக ஒரு ‘சிகளி’யை வாங்கினோம். அது அப்படியே ‘லடா’வைப் போன்றதுதான். கொஞ்சம் பழைய உருப்படிவம் அவ்வளவுதான். ஆனால் அதே சோவியத் உற்பத்தியாளரினால் தயாரிக்கப்பட்டது. எனவே நாங்கள் ‘சிகளி’யை வாங்கியதற்காக ஒன்றும் வருத்தப்படவில்லை. அந்தக் கார் பற்றி எலேனாவுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் ஏராளமான நினைவோடைகள் இருக்கின்றன. அந்தக் காரில் நாங்கள் நீண்ட பயணங்கள் சென்றிருக்கிறோம். எங்களால் இயலக்கூடிய எல்லா இடங்களுக்கும் நான் அவர்களை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறேன், உங்களால் அதனை கற்பனை செய்ய முடியும்.

ஞாயிற்றுக்கிழமை 

என் மகள் இன்றைக்கு என்னை அவர்களுடைய தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றாள். அது ஒரு வகையில் தேவாலயம் மாதிரியும் இன்னொரு வகையில் ஒரு உடற் பயிற்சிக் கூடம் மாதிரியும் இருந்தது. ஒவ்வொருவரும் அழகாக ஆடை அணிந்திருந்தார்கள். அவர்கள் வணக்கம் சொன்னார்கள், எல்லோரும் கண்ணியமானவர்கள், அதில் எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் அமர்ந்தோம். அங்கே எங்களுக்கு முன்னே மேடையின் மேலே நின்று கொண்டிருந்த ஒருவன் கதைத்துக்கொண்டிருந்தான். அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு அவர்கள் தங்களுடைய பைபிள்களை வாசித்தார்கள், எழுந்து நின்றார்கள், இருந்தார்கள், பாடினார்கள், கைகளை பற்றினார்கள். சுருக்கமாக சொன்னால் – நல்ல மனிதர்கள், அதில் எந்த சந்தேகமும் இல்லை. பிரார்த்தனை முடிந்த பின்பு, மதகுருவைச் சந்திப்பதற்காக அவர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள். இவர்கள் எங்களுடைய மதகுருக்கள் போல நேர்த்தியற்ற அடர்ந்த தாடியையோ, உயர்ந்த கருப்புத் தொப்பிகளையோ கொண்டிருக்கவில்லை. மாறாக, முற்றாகச் சவரம் செய்யப்பட்ட முகம், நேர்த்தியான முழு ஆடைத் தொகுதி அணிந்த ஒரு இளைஞனாக இருந்தார். அவர் நேரடியாக என் கண்களை நோக்கி என்னைப் பார்த்து புன்னகைத்தார். அவர் எனது மகளிடம் பேசியபடியே எனக்குத் தலையசைத்தார். நாங்கள் புறப்பட ஆயத்தமாகும்போது, சரியா, எனது மகளிடம் ஏதோ கேட்டவர் என்னை நோக்கி கைகளை நீட்டியபடி பல்கேரிய மொழியில் – டொவிசேடன் (Dovizhdane) என்று சொன்னார், ஒருவிதமான தனக்குரிய உச்சரிப்புடன், ஆனாலும் அது “பிரியாவிடை” வணக்கம் என்று தெளிவாகத் தெரிந்தது. 

நான் அவருக்குக் கை குலுக்கினேன். எனக்கு அவருடைய மொழிச் சொற்களில் ஒன்று ஏற்கனவே தெரிந்திருந்தது, “ரொமாற்றோ” ஆனால் அதை உரத்துச்  சொல்வதற்கு எனக்குத் தயக்கமாக  இருந்ததால், ராடோஸ்லவாவையும் அவளுடைய கணவனையும் முட்டாளாக்காமல் இருப்பதற்காக, நான் மௌனமாக இருந்தேன். அதைத் தவிர வேறெந்தக் காரணமும் இல்லை.

ஆகஸ்ட் .

நான் ஒரு நாட்குறிப்பேட்டை  வைத்திருக்கிறேன். ஏனென்றால் என்னுடன் கதையளந்து கொண்டிருப்பதற்கு ஒருவரும் இல்லை. எனது மகள் பகல் முழுவதும் வேலையில் இருப்பாள். மருமகன் வீட்டிற்கு வந்ததும் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருப்பான். பேத்தி கணணியுடன் ஒட்டிக்கொண்டு இருப்பாள். அவள் தனது வீட்டுப் பாடங்களை செய்வாள். உண்மையிலேயே நிறையவே படிக்கிறாள், என்னுடைய பேத்தி. அவள் ஒரு நல்ல குழந்தை. அவள் பற்றிப் பேசலாம். அவளுடைய பெயர் எலேனா. அவளுக்கு அவளுடைய அம்மம்மாவின் பெயரைச் சூட்டினார்கள். அவளைப்பற்றியும் இன்னொரு சமயத்தில் எழுதுவேன். அவள் நிச்சயமாக நிறையப் படிக்கிறாள். உன்னுடைய அம்மாவைப் போல் இவள் இருக்கிறாள் என்று நான் ராடோஸ்லாவாவிற்குச் சொல்வேன். எலேனா – அவள் எப்போதும் எதையாவது வாசித்துக் கொண்டிருந்தாள். எதையாவது கற்றுக் கொண்டிருந்தாள், எதையாவது படித்துக் கொண்டிருந்தாள்.

***

எனது மகள் ராடோஸ்லாவா ஒரு பல்கலைக்கழகத்தின் இரசாயன ஆய்வுக்கூடத்தில் வேலை செய்கிறாள்.

***

ஆகஸ்ட் 24,

நானும் எனது மருமகனும் இன்றைக்கு கடைக்குப் போனோம். நாங்கள் கடைக்கெல்லாம் போய் சாமான்களை வாங்கிக்கொண்டு வந்து வாகனத்தில் ஏற்றினோம். வாகனம் நிறுத்தியிருந்த இடத்தில் இருந்து நாங்கள் புறப்படும்பொழுது, திடீரென்று பின்பக்கத்தில் இருந்து ‘சட சட’ என்று ஒலி எழுப்பத் தொடங்கியது. சட சட! சட சட! சட சட!!! மருமகன் வாகனத்தை நிற்பாட்டினான். நாங்கள் வாகனத்தை விட்டு இறங்கினோம். வாகனத்தைக் கூர்ந்து அவதானித்தோம். வண்டியின் பாதுகாப்புக்கான பின்வளையம் எதிலோ கொழுவி ஊசலாடிக் கொண்டு இருந்தது. அது புதிதாக வாங்கியதாக இருக்க வேண்டும்…. ஆனால் என்னதான் இருந்தாலும். என் மருமகன் காரைச் சுற்றிச் சுற்றி நடந்தான். அவன் என்ன செய்வதென்று தெரியாமல் தலையைச் சொறிந்தபடி தன்னுடைய கைத்தொலைபேசியில் யாரையோ அழைத்தான். அப்போது நான் அவனிடம் “ஒன்றுக்கும் கவலைப்படாதே; நொடிப்பொழுதில் பிரச்சினை முடிந்துவிடும்” என்று கொஞ்சம் பொறுக்கும்படி சொல்கிறேன். நான் அந்த வாகனங்கள் நிறுத்தும் பகுதியின் மூலை முடுக்குகளைத் தேடிப் போகிறேன். 

ஏதாவதொரு கம்பிச்சுருள் எங்கேயாவது தட்டுப்படுகிறதா என்று தேடினேன் – என்ன சொல்கிறேன் என்றால், எங்கு அந்த பின்வளையம் கழன்று வந்திருக்கிறதோ அதை இறுகக் கட்டுவதற்காக,. அதற்கு ஒன்றும் பெரிய ஏவுகணை அறிவியலோ எதுவுமோ தேவையில்லை… எனவே நான் ஒரு கம்பிச்சுருளுக்காக இங்கும் அங்கும் தேடிக்கொண்டு திரிகிறேன். ஒரு சிறிய கம்பித்துண்டு கூட கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. என்ன இது! வண்டிகள் நிற்பாட்டும் இடத்தின் முழுப் பகுதியையும் சுற்றி வருகிறேன், அருகில் இருந்த நெடுஞ்சாலை ஓரத்திலும்கூட நடக்கிறேன் – ஆனால் ஒரு கம்பித்துண்டுகூட இல்லை. அப்போது நான் எனக்குள் யோசிக்கத் தொடங்குகிறேன். அதெப்படி, இந்தப் பெரிய அமெரிக்காவில் ஒரு சின்னத் துண்டு கம்பியைக்கூட காண முடியவில்லை? ஆனால் தொடர்ந்து நடக்கிறேன், சரியா, நான் எனது முயற்சியை கைவிடவில்லை. தொடர்ந்து தேடுகிறேன். எப்படி இருந்தாலும், ஒரு கட்டத்தில் எனது மருமகன் கவலை தோய்ந்த பார்வையுடன் என்னைத் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதை நான் அவதானித்தேன். எனவே நான் அவனுக்கு “நான் ‘ரெல்’ தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்கிறேன். அவனுக்கு விளங்கவில்லை. “‘ரெல்’, நான் ‘ரெல்’ கிடைக்குமா என்று பார்க்கிறேன்” என்று திரும்பவும் சொல்கிறேன். அவன் “என்ன?!” என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்த இன்னொரு ஆங்கில வார்த்தை. எனவே நான் ‘ரெல்’ என்று சொல்கிறேன். ஒரு பாம்பை இழுப்பது போல கைகளால் செய்து காட்டுகிறேன்: ‘ரெ……..ல்’. அவனுக்கு இன்னும் விளங்கவில்லை. நான் அவனைப் பார்க்கிறேன். அவன் தன்னுடைய கைத்தொலைபேசியை எடுத்து, இன்னொரு தடவை பேசுகிறான். ஆனால் நான் என்னுடைய அலுவலில் தீவிரமாக இருக்கிறேன். நான் பாதுகாப்புக் கம்பி வேலியைத் தாண்டிக் கடந்து, அருகிலிருந்த புதருக்குள் கிளறத் தொடங்குகிறேன் – பாதுகாப்புக் கம்பி வேலிகளுக்கு அருகாமையில் எப்போதும் ஏதாவது ஒரு கம்பித் துண்டை கண்டு பிடிக்க முடியும். அப்போது எனது நினைவு என் நாட்டுக்குத் திரும்பியது. அங்கு ஒரு கம்பிச்சுருள் இல்லாமல் ஒருவர் ஒருநாளும் இருக்க முடியாது. உங்களுக்குத் தேவையான மற்ற எல்லாவற்றையும் விட இது முக்கியம். அதிலும் உங்களுக்குத் தேவையான அளவை விடவும் அதிகமாகவே கிடைக்கும். நான் எங்கிருந்து வந்தேனோ அங்கு எல்லாவிதமான கம்பிகளும் கிடைக்கும். இந்தக் கம்பிகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன என்று ஒரு நாள்கூட நான் என்னைக் கேட்டதில்லை. உங்களுக்கு எப்போது அது தேவையோ அப்போது அது கிடைக்கும். ஆனால் இங்கு கம்பிச்சுருள் இல்லை. பாதுகாப்புத் தண்டவாளத்திற்கு அருகில்கூட எந்தக் கம்பியும் இல்லை. 

**

ஓகஸ்ட் 25

என்னுடைய குடும்பம் ‘ஆகேயன் த்ரேஸ்’ (Aegean Thrace)ஐ சேர்ந்தது. இப்போது அது வடக்கு கிரேக்கம். நாங்கள் திராசியர்கள். 1914ம் ஆண்டில் அவர்கள் பல்கேரிய நகரத்தின் வடக்கே அமைந்த ‘பசார்ட்ஸிக்’  இற்கு, பின்னர் அங்கிருந்து வடகிழக்கில் அமைந்த ‘டோர்ப்ருட்ஸா’விற்கு இடம் மாறினார்கள். அது குறித்து இன்னொரு சமயத்தில் எழுதுவேன். என்னால் அதை நினைக்காமல் இருக்க முடியவில்லை…. அந்த நினைப்பு நேற்று முழுவதும் என்னை எதுவும் செய்ய விடவில்லை. அது என்னை நிலைகொள்ளாமல் ஆக்கியது… என்ன நாடப்பா இது, எங்கேயும் ஒரு கம்பித் துண்டுகூட இல்லாமல்?

**

இன்று என் மகள் அப்பா என்றாள்…. அவள் சொன்னாள்….

**

ஓகஸ்ட் 26

எனவே… நான் இங்கு ஓரளவு மகிழ்வான விடயங்கள் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன். சோகங்கள் குறித்து பேசிக்கொண்டிருப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. அத்துடன் நான் நல்லதல்லாத விஷயங்களை பற்றிப்பிடித்துக் கொண்டிருப்பவனல்ல. நல்லது, அது சரியானதல்ல என்று நான் நினைக்கிறேன். நல்லதல்லாத விடயங்களையும் நான் நினைவு கூர்கிறேன். ஆனால் அவற்றைப்  பற்றி நான் ஏன் பேச வேண்டும்?

**

ஓகஸ்ட் 27

அவர்கள் என்னை இன்று நகர்ப்புறத்திற்கு கூட்டிச் சென்றார்கள். வானளாவிய கட்டிடங்கள், மோட்டார் வண்டிகள், சத்தம்… அங்கு எந்தத் தெருநாய்களும் சுற்றிக் கொண்டிருக்கவில்லை என்ற உண்மை எனக்குள் பதிந்தது. சந்தேகத்துக்கிடமின்றி, வீடு வாசலற்ற மனிதர்கள் அங்கே நிறைந்திருந்தார்கள். அவர்கள் தட்டையாக்கப்பட்ட கடதாசிப் பெட்டிகளின்மீது அழுக்கான தடித்த கம்பளியினால் தங்களைச் சுருட்டியபடி, நடைபாதைகளில் கிடந்தார்கள். அது ஒரு துயர் தரும் காட்சி. அங்கு தெருமனிதர்கள் நிறைய இருக்கிறார்கள். தெருநாய்கள் இல்லை. ஆனால், ம்…. ஹ்ம்… என்னத்தை சொல்வது. 

**

ஓகஸ்ட் 28, பிற்பகல் 

இன்றைக்கு பகல் நானும் ட்ராகனும், அதுதான் இந்த வாத்திய இசைஞன், இந்த நாளின் தொடக்கத்தில், அவன் என்னுடன் இருந்தான். என்ன ஆச்சரியம்! எப்படி வாசிக்கிறான். மாறாக, எப்படி அவனால் இப்படி வாசிக்க முடிகிறது. ட்ராகன் காலமாகி விட்டான், அவனுடைய காலத்திற்கு முன்பே அவன் சென்று விட்டான். அவன்… என்ன இழவுக்கு நான் இப்ப ட்ராகனைப் பற்றி நினைத்தேன்? காலநிலை, உண்மையில் இன்றைக்கு ஒரே புழுக்கமாக இருக்கிறது.

**

செப்டெம்பர் …

என்னுடைய பேத்தியை பாடசாலைக்கு கூட்டிக்கொண்டு நடந்து போனேன். வீட்டில் இருந்து பாடசாலை பதினைந்து நிமிடங்கள் நடைதூரத் தொலைவில் இருந்தது. முதலில் மேலே கொஞ்சத் தூரம் நடந்து பிறகு வலது பக்கம் திரும்பவேண்டும். நிறுத்த வெளிச்ச சந்தியை கடந்தபின், மாடிக் கட்டிடங்கள் இரண்டை கடந்தீர்கள் என்றால் பாடசாலை. 

நான் சொல்லியது போல, சொல்லிக்கொண்டிருப்பதுபோல நான் எனது பேத்தியை பாடசாலையில் விட்டுவிட்டு திரும்பி வரும்பொழுது அந்தச் சாலையில் தொடர்ந்து மேலும் நடந்தேன் – அங்கு மிகவும் விநோதமான மரங்கள் இருக்கின்றன. அவை கொஞ்சம் செங்காலி மரங்களைப் போன்று தோற்றமளித்தன. அந்த மரத்தின் பட்டைகள் விசித்திரமானவையாக சாம்பல் நிறத்திலும், மண்ணிறத்திலும், ஆனால் டொல்பினின் தோலைப் போன்று  வழுவழுப்பாக இருந்தன. நான் என்றோ ஒரு நாள் கருங்கடலின் மீது ஒரு டொல்பினை பார்த்திருக்கிறேன். கடற்கரைமேல் அலைகள் அதனை தள்ளியிருந்தன. ஒருவேளை அது நோய்வாய்ப்பட்டிருந்திருக்கலாம், காயமடைந்திருந்திருக்கலாம் அல்லது வயதாகி இருந்திருக்கலாம் அல்லது ஏதோ ஒன்று – அது அசைவதற்கு மிகவும் கஷ்டப்பட்டது. ஆனால் அது இன்னும் சாகவில்லை. இன்னும் உயிரோடு இருந்துகொண்டிருந்தது. எனக்கு அதன் தோல் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது – வழுவழுப்பான, மென்மையான சாம்பல் நிறம். இந்த மரங்களின் பட்டைகள் எனக்கு அந்த டொல்பினின் தோலை  நினைவூட்டின. அத்துடன் நான் எலேனாவைப் பற்றியும் நினைத்தேன். என்னதான் இருந்தாலும்…

இப்போது நான் நடந்துகொண்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக மேல்வீதியை அடைகிறேன். வயதாகிப்போன ஒரு ஆணையும், பெண்ணையும் பார்க்கிறேன். அவர்கள் யப்பானியராக அல்லது சீனராக இருக்கலாம். அவர்கள் எந்த நாட்டினர் என்று எனக்கு சரியாக தெரியவில்லை. என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயமாக ஆசிய இனத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் நடைபாதையில் என்னை நோக்கி நடந்து வந்துகொண்டிருக்கிறார்கள். சரியா, அது எனக்குள் ஓருணர்வை ஏற்படுத்துகிறது – மரியாதையான மனிதர்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் ஒரு சிறிய தலையசைப்பினால் எனக்கு வணக்கம் சொல்கிறார்கள். நானும் பதிலுக்கு தலை அசைக்கிறேன். அது ஒன்றும் பெரிய விடயம் இல்லை என்றாலும் எனக்கு நல்லதொரு உணர்வைத் தருகிறது, அதாவது இன்னொரு மனிதரைப் பார்த்து அவர்கள் வாழ்த்துகிறார்கள் என்பது. ஆனால் நான் மீண்டும் எலேனாவின் இல்லாமையை உணர்கிறேன். இன்றைக்கு எனது எழுத்து இத்துடன் நின்று கொள்கிறது.

***

செப்டெம்பர் 8

பள்ளிக்கூடத்திற்கு அப்பால் ஒரு பள்ளத்தாக்கு இருக்கின்றதென்று எனக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. நேற்றிரவு ஏதோ ஒரு விதமாக அந்தக் கதை வந்தது. “அந்தப் பள்ளத்தாக்கு அப்படிப்பட்டது, இந்தப் பள்ளத்தாக்கு இப்படிப்பட்டது என்று என் மகள் சொல்லிக்கொண்டிருந்தாள். நிச்சயமாக, எனக்கு அது மிகவும் சுவாரசியமானதாக இருந்தது. நான் அவளிடம் அந்தப் பள்ளத்தாக்கைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினேன். அப்போது அவள் என்னை ஒரு விரோதி போல் பார்த்தாள். அவள் என்னை எச்சரித்தாள் – அது மிகவும் தொலைவில் இருப்பதாகச் சொன்னாள். அங்கு எனக்கு ஒரு வேலையும் இல்லை என்று ஏதேதோ சொன்னாள். அங்கு நான் போகாமல் இருப்பதுதான் நல்லது. பிறகு அங்கு போய் தொலைந்து வீட்டுக்குத் திரும்பி வருகின்ற வழியும் தெரியாமல் போய்விடும்… இப்படி இந்தப் பாதையை தவறானதாக சித்தரிக்க முயற்சித்தாள். என்னதான் இருந்தாலும்…

செப்டம்பர் 12

நான் எனது பேத்தியை பாடசாலையில் விட்டுவிட்டுத்  திரும்பி வீட்டை நோக்கி நடந்தேன். ஆனால் எனக்கு வீட்டுக்குத் திரும்பிப் போக வேண்டும்போல் இருக்கவில்லை – வீட்டில் போய் சுற்றிச் சுற்றி நாள் முழுக்க எதைத்தான் செய்வது? நான் அதே வீதியில் மேற்கொண்டு நடந்தேன். எனக்கான நேரத்தை மகிழ்வாக எடுத்துக் கொண்டேன். மீண்டும் அந்த யப்பானிய ஜோடியை எதிர்கொண்டேன், அவர்கள் மீண்டும் என்னைப் பார்த்து தலை அசைத்தார்கள், நானும் அவர்களை நோக்கித் தலை அசைத்தேன். அவர்கள் இருவரும் அருகருகே மெதுவாக நடந்து கொண்டிருந்தார்கள், உலாவினார்கள். அவர்களும் சுற்றிச் சுற்றி உலாவுவதைத் தவிர வேறு என்னதான் செய்வது? அவர்கள் தங்களது பாதையில் சென்றார்கள். நான் எனது பாதையில் சென்றேன். அப்போது நான் கீழ் வீதியை நோக்கி நடந்தேன். என்னிரு கைகளையும் பின்னால் கட்டியபடி போனபோக்கில் நடந்து கொண்டிருந்தேன், வயதானவர்கள் ஏன் இப்படி நடந்துகொண்டு திரிகிறார்கள் என்று பல வருடங்களிற்கு முன்னர் நான் அதிசயித்திருக்கிறேன் – கொஞ்சம் குனிந்தபடியும் பின்னால் கைகளைக் கட்டியபடியும், ஆனால் இப்போது என்னைப் பாருங்கள் – என் பின்னால் எனது கைகளைப் பற்றியபடி, என்னை பிடித்தபடி நான். 

இப்படிப் பார்த்தால்  நான் இப்போது தனியே சும்மா சுற்றிக்கொண்டிருக்கிறேன், ஆனாலும் என் கண்கள் ஒரு கம்பிச் சுருளை சுடுவதற்கு தயாராக இருந்தபடி. எனக்கு நான் சொல்லிக்கொள்கிறேன் – எப்படியும் ஒரு கம்பிச் சுருளைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த நாட்டில் எங்கேயோ ஓரிடத்தில் ஒரு கம்பித்துண்டு இருக்க வேண்டும். சரியாக பராமரிக்கப்படுகின்ற, எல்லாமே துப்புரவாகவும் ஒழுங்காகவும் இருக்கின்றதென்று அவர்கள் சொல்லிக்கொள்கிற  ஒரு நாட்டின் தெருவில் ஒரு கம்பித் துண்டைக்கூட கண்டு பிடிக்க முடியவில்லை. அப்போது நான் தேடுகிறேன், கம்பி, கம்பி, கம்பி, ஏதாவது ஒரு கம்பிச் சுருள் இங்கே அல்லது அங்கே? இல்லை, கம்பி இல்லை. ஆனால் எனது தலைக்குள் அது ஏற்றப்பட்டு விட்டது.. எனது தலைக்குள் அது புகுந்து விட்டது. எனது தலைக்குள் ஏதாவது புகுந்து விட்டால் அதை வெளியே செல்ல விடமாட்டேன். அந்த நாளுக்கு மீண்டும்… எலேனா இப்படிச் சொல்லி இருப்பாள், கிறிஸ்டோ, நீ உனது தலைக்குள் எதையாவது புகுத்தினாய் என்றால், …எலேனாவைப் பற்றி…. காணும்…. என்னதான் இருக்குது. 

நான் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போது பள்ளத்தாக்கிற்கு வந்து சேர்ந்து விட்டேன். நான் மேலே நின்று கீழே பார்க்கிறேன். அப்படியென்றால் இதை இவர்கள் பள்ளத்தாக்கு என்று சொல்கிறார்கள். ஹா ஹா ! நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் என்றால், நீர் வழிந்தோடியதால் மலைகளுக்கு இடையில் ஏற்பட்ட ஒரு பாரிய இடுக்குப் பாதை  என்று சொல்வேன். மண்டிய புதர்களும், குட்டையான மரங்களும் அத்துடன் ஒரு விதமான புங்கமரமும் அங்கு தெரிகின்றன. ஆனால் இந்த புங்க மரம் எங்களுடையதைப் போன்றதல்ல. இது அளவில் சிறியதாகவும், தடித்த இலைகள் கொண்டதாகவும் இருக்கின்றது. சுருங்கச் சொன்னால், இது ஒரு மலை இடுக்கு. சரி. இது ஒரு பாறைப்பிளவு சரியா, ஆனால் இந்த இடம் இன்னொரு விதமாக இருக்கிறது. பின்னோக்கி எனது ஊரை யோசித்தால், அங்கு ஊரவர்கள் குப்பைகளை பெரும் கிடங்கினுள் போட்டார்கள். நகரத்தவர்களும் அதையேதான் செய்கிறார்கள். ஒரு பெருங்கிடங்கு என்பது எங்களுக்கு சகித்துக்கொள்ள முடியாத ஒன்று. ஒரு அருவருப்பான விடயம். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது, எங்களுடைய நகரத்தில் அந்த நாட்களில் புதிய வசிப்பிடத்திற்கான  கட்டிடங்களை அமைத்தபொழுது – நாங்கள் அவற்றை ‘புதிய கட்டிடங்கள்’ என்று அழைத்தோம், அவைகள் கட்டப்பட்டு இப்போது 30 வருடங்கள் கடந்த நிலையிலும் அப்படித்தான் இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறோம், பரவாயில்லை. – எனவே நான் சொல்லிக்கொண்டிருந்ததைப்போல், அவர்கள் பாறைப் பிளவுக்கு மறுபக்கத்தில் புதிய கட்டிடங்களை கட்டினார்கள். அங்கு வசித்தவர்கள், பழைய கட்டிடங்களில் வசித்தவர்களைப் போலவே, அந்தக் கிடங்கில் தங்கள் குப்பைகளை போட்டார்கள். என்னதான் இருந்தாலும்…

***

என் மருமகன் நாளைக்கு தனது தொழில் நிமித்தமாக வெளியே போகிறான். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.

***

செப்டெம்பர் 18

நான் எனது பேத்தியைப் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு, எனது  நேரத்தை  சாவகாசமாக எடுத்துக்கொண்டு, எனது வழமையான பாதையைத் தொடர்ந்தேன். அந்த ஜோடியை நான் மீண்டும் கண்டேன். நாங்கள் மீண்டும் ஒருவருக்கொருவர் தலையசைத்துக் கொண்டோம். சிரித்துக் கொண்டோம். நாங்கள்  கிட்டத்தட்ட ஒரே வயதுடையவர்களைப் போல இருக்கிறோம். ஆனால் அவர்கள் இருவராக இருந்தார்கள். எனவே அவர்களுக்கு நேரத்தை போக்குவதில் சிரமம் இருக்கவில்லை. சுற்றிலும் எல்லாமே பசுமையாக இருந்தது, இரவு முழுவதும் அவர்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சுகிறார்கள். அவர்கள் அப்படிச் செய்யாவிடில் எல்லாமே கருகிப்போகும். இதை நான் அவதானித்திருக்கிறேன்.

இப்போது அயலவர் ஒருவரின் வீட்டு வேலியில் சிறு பறவை ஒன்றைக் காண்கிறேன். அதைப் பார்த்தால் கொஞ்சம் பல்கேரியாவில் உள்ள சிறிய பாடும் பறவையைப் போல் இருந்தது. ஆனால் வித்தியாசமானது. சாம்பல் நிறம், வழுவழுப்பான வட்டமான சிறிய தலை, கூரான கறுப்பு அலகு, ஆனால் வயிற்றுப்புறம் வெள்ளை, நீளமான வால். ஐந்து அல்லது ஆறு அடிகள் தூரம் தள்ளி நின்று அதை அவதானித்துக் கொண்டிருக்கிறேன். அது என்னைத் திரும்பிப் பார்க்கிறது. ஒரு கட்டத்தில் அது கீச்சிடுகிறது. பின்னோக்கி என்னுடைய ஊரை யோசித்துப் பார்த்தால் அங்கிருக்கும் பறவைகள் அவ்வளவு சிநேகபூர்வமானவையல்ல. இந்தப் பறவை என்னை ஒரக் கண்களால் பார்த்தபடி ‘கீச் கீச் கீச்’ என்கிறது. நான் என்னைச் சுற்றிலும் நன்றாக உற்றுப் பார்த்துவிட்டு, எவரும் பார்வைக்குத் தென்படவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, அதனை நோக்கி ‘கீச்’  என்று குரல் கொடுக்கிறேன். நான் ‘கீச்’. அது  ‘கீச் கீச்’. பிறகு அது சிறகுகளை படபடத்தபடி கொஞ்சம் தள்ளிப் போய் திரும்பவும் ‘கீச்’. நானும் தொடர்ந்து ‘கீச்’. இங்கு ஒரு  ‘கீச் கீச்’. அங்கு ஒரு  ‘கீச் கீச்’. நான் என்னையறியாமலேயே பள்ளத்தாக்கை வந்தடைந்து விட்டேன். பறவை கடைசித் தடவையாக ‘கீச்’ என்றபடி பள்ளத்தாக்கினுள் சென்று மறைந்து விட்டது. 

நான் இப்போது பள்ளத்தாக்கினருகில் நிற்கிறேன். பறவை திரும்பி வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். மேலும் சில தடவைகள் ‘கீச்’ என்று சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் பறவையிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. 

பின்னர் நான் ஒரு குச்சுப் பாதையைக் காணும்வரை, பாதுகாப்புக் கம்பி வேலியருகே நடக்கிறேன். நான் உணர்ந்து கொள்வதற்கு முன்பே நான் பள்ளத்தாக்கின் கீழ் நோக்கி இறங்கும் பாதையின் முன் நிற்கிறேன். அந்தச்  செங்குத்தான பாதையில் இறங்கிக்கொண்டு செல்கிறபொழுது எனது நேரம் கழிந்துகொண்டிருக்கிறது. நான் அவதானமாக இருக்கிறேன், எங்கேயாவது விழுந்து தொலைந்து விடாமல் இருப்பதற்காக. … நான் அங்கு காண்பது என்ன? இது வேறொரு அமெரிக்கா. சில காய்ந்த புதர்கள். அதைப் பார்த்தால் எங்களுடைய ஊரில் இருக்கின்றதொரு முட்செடிபோல் இருக்கின்றது. ஆனால் இது மாதிரி அல்ல அது. இன்னும் கொஞ்சம் கீழே பசுமையான புதர்ச் செடிகள், பிறகு அப்பால் பார்த்தால் எல்லாம் காய்ந்தவையாக இருக்கின்றன. பசுமையான செடியை எனக்குப் பார்த்தவுடன் தெரியும். நீண்டுயர்ந்த நாணல்கள்,- ‘உயர்ந்த’ என்று நான் சொல்லும்போது, என்னை விடவும் இரண்டு அல்லது மூன்று மடங்குகள் உயர்ந்தவை. காற்று அவற்றினூடு ஷ்… ஷ்… ஷ் என்று சலசலக்கிறது. பறவைகள் கீச்சிடுகின்றன. வண்டுகள் ரீங்காரமிடுகின்றன. காற்று வித்தியாசமானதாக இருக்கின்றது. ஒரு கிராமத்து ஒழுங்கை போல, தூசி மணம். சொல்ல முடியாதளவு காலமாக, மக்கள் அதை அப்படியே விட்டிருக்கிறார்கள். எனவே இப்போது நான் இந்தப் பாதையில் நடக்கிறேன். மேலும் மேலும் நடக்கிறேன். எனக்கு சுவாசிப்பது வர வர கடினமாகிக்கொண்டு வருகிறது, எனக்கு நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியாதளவுக்கு – கிராமத்திலா, நகரத்திலா, அமெரிக்காவிலா அல்லது எனது ஊரிலா?

இதில் இருந்து ஒரு நூறு யார் தூரத்தில் நெடுஞ்சாலைகள், வீடுகள், தெருவோர நடைபாதை, மோட்டார்வண்டிகள். இங்கு ஒரு வனாந்தரம். ஒரு கட்டத்தில் நான் சில அலரி மரங்களை நெருங்குகின்றேன் – அவைகள் அலரிகள் சரியா, ஆனால் திரும்பவும் அவை எங்களுடையவை போன்றதல்ல, அவை  சிறிய இலைகள் கொண்டவை. அலரிகளுக்கு கீழ் ஒரு சிற்றோடை, பாறைகளுக்கு இடையில் ‘கள கள’ என்று ஓடுகிறது. நான் தடுக்க முடியாத வைராக்கியத்துடன் பயப்படாமல் அதற்குள் நுழைகிறேன் – பாதையைத் தொடர்கிறேன்.  பிறகு அந்தப் பாதை மேலெழுகிறது. நான் தொடர்ந்து நடக்கிறேன், சில பழைய தண்டவாளங்களை காணும்வரை தொடர்ந்து நடக்கிறேன். தண்டவாளங்களின் மணம் எனக்குள் ஊடுருவியது. கஸ்பிஷானின் ரயில்களின் மணம். எலேனாவின் சகோதரி கஸ்பிஷான் நகரத்தின் ரயில் நிலையத்துக்கருகில் வசித்தாள். புது வருடத்தைக் கொண்டாடுவதற்கு எப்போதும் அங்கு ரயிலில்தான் செல்வோம், அதுதான் எனக்கு அவற்றை நினைவுபடுத்தின. இங்கு நான் சில தடவைகள் ரயில் ஊதுகின்ற சத்தத்தைக் கேட்டிருப்பதாக நினைத்திருந்தேன். இங்கு ரயில் தண்டவாளங்கள் எங்கே இருக்கின்றன என்று என் மகளிடம் கேட்டேன். ஆனால் அவள் “எனக்குத் தெரியாது” என்று சொன்னாள் – ரயில் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி கவலை இல்லை என்பது போல். அவைகள் வெறும் சரக்கு வண்டிகள் தான் என்றும் அவள் சொன்னாள், இங்கு எவரும் ரயிலில் பிரயாணம் செய்வதில்லை. நான் அவளிடம் “ஏன் அப்படி?” என்று கேட்டேன். நீங்கள் ஏன் ரயிலில் போகக் கூடாது? ஏனென்றால் இங்குள்ளவர்கள் எல்லோரும் மோட்டார் வண்டி வைத்திருக்கிறார்கள். ஓமோம், பின்பக்கத்தில் பம்பர் கழன்று தொங்குகின்ற வண்டிகள், நான் நிச்சயமாக எனக்குள் மட்டும்தான் சொன்னேன். அவளுக்கு நான் எதுவும் சொல்லவில்லை. என்ன இருந்தாலும். நான் ரயில் பாதையைக் கண்டுபிடித்து விட்டேன். அதற்குப் போட்டிருந்த சரளைக் கற்கள் எங்களுடையதைப் போன்றதல்ல. இது சிவப்பும் சாம்பலுமான கூழாங்கற்கள். ஆனால் எங்களுடையதை விட பெரிதாக இருந்தது. அந்த தூசி படிந்த பாதையில் தொடர்ந்து நடக்கிறேன், அது மெதுவாக வடக்குப் புறமாக வளைந்து சென்று தொடர்கிறது, தொடர்ந்து ரயில் தண்டவாளத்திற்கு சமாந்தரமாகவே செல்கிறது. 

பிறகு நான் ஒரு நீளமான கம்பிவேலியை காண்கிறேன் – கிறிஸ்டோ, கிழவா! உன்னுடைய அதிர்ஷ்டம் இறுதியில் உன்னிடம் வந்துவிட்டது, நான் அதை நோக்கி ஓடுகிறேன். அந்த வெளியில் நான் காண்பது என்ன? கம்பிச் சுருள். துருப்பிடித்த,  2 அல்லது 21/2 யார்கள் நீளமான, எனக்கு தேவையான அதே அளவு. கொஞ்சம் அதிகம் என்று கூடச் சொல்லலாம். அதைக் கண்டு பிடித்தது அன்றைய எனது நாளை முழுமையாக்கியது. நான் அந்தக் கம்பிச் சுருளை எடுக்கிறேன். அதை ஒரு வட்டமாக சுற்றி அங்கிருந்து இழுத்தெடுக்கிறேன். ஒரு கட்டத்தில் பாதை இரண்டாகப் பிரியும் வரையிலும் எல்லாமே நன்றாக நடந்தது. இப்போது நான் எந்தப் பாதையில் போகவேண்டும், சரி வலது பக்கம் திரும்பிச் செல்கின்ற பாதையில் சென்றால் என்ன? இன்னுமொரு அலரி மர நிரலைக்  கடக்கிறேன். மீண்டும் ஒரு சிற்றோடை. இது முதலில் பார்த்ததை விடப் பெரியது. இன்னும் கொஞ்சத் தூரம் அந்த ஆற்றை ஒட்டி நடக்கிறேன். எவ்வாறு அதனூடாக எனது பாதையைத் தொடர்வது என்று கணிப்பிடுவதற்காக சுற்றிலும் பார்க்கிறேன். இப்போது எனக்குத் தெரிவது என்ன? ஒரு தக்காளி மரம். (டோமாட்டொ) அவ்வளவு பெரியதல்ல, அவ்வளவு சிறியதும் அல்ல. ஆனால் ஆரோக்கியமாக இருக்கிறது. ஒரு தக்காளி மரம். அதில் ஒரு தக்காளி  இருக்கிறது. ஒரு உண்மையான தக்காளி. அது எவ்வளவு தூரம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்பதை என்னால் விபரிக்க முடியாது. வேறு மரங்களும் இருக்கின்றனவா என்று சுற்றிவரப் பார்த்தேன். – ஒருவேளை நான்  வேறொருவருடைய தோட்டத்திற்குள் தவறுதலாக நுழைந்துவிட்டேனா என்று நினைக்கிறேன். ஆனால் இல்லை. அப்படி இல்லை. அந்த ஒரேயொரு மரம்தான். அது எப்படி இந்த வனாந்தரத்துக்குள் வந்து  சேர்ந்ததென்று, வேர்  விட்டதென்று யாருக்குத் தெரியும். தன்னை ஆழமாயூன்றி ஒரு பழத்தைக்கூட பிரசவித்திருக்கின்றது. நான் இளைப்பாறுவதற்காகவும், இந்த சிறிய காட்டில் எனது கண்களை குளிர்விப்பதற்காகவும் அமர்கிறேன். அப்படி அமர்ந்த பொழுதில் இந்த பாறைகளுக்கிடையே நீருக்கு அருகிலும் உடைத்துப் போட்ட தண்டவாளத்திற்குத் தள்ளியுமொரு புள்ளியைக் கண்டுபிடிப்பதை, ஒரு தென்மேற்கு சரிவில் தன்னை உருப்பிப்பதை சாத்தியமாக்கியது, இயற்கை. நான் எனக்குச் சொல்லிக்கொள்கிறேன்: இந்த வில்லங்கமான மரத்தை  இங்கிருந்து கிளப்பிக் கொண்டு போய் மகளின் வீட்டுக்கு பின்னால் உள்ள பூங்கன்றுகளுக்கிடையில் நட்டு விடுவோமா – அவள் அதை கண்டுபிடிக்க மாட்டாள் – ஆனால் அதை அவள் எப்படி எடுத்துக் கொள்வாள் என்று அதிசயித்தேன்? பிறகு என் மருமகன் திரும்பி வந்து – tomato – தக்காளி என்பான்.

நேரம் எப்படிப் போனதென்று எனக்குத் தெரியவில்லை. பகல் எப்படி மேல் உச்சியில் இருந்து மங்கிக்கொண்டு செல்கின்றது என்று நான் யோசிக்கிறேன்.  ஒன்றில் நான் என்னைத் தொலைத்திருக்க வேண்டும், ஒன்றில் சூரியன் எனக்குள் புகுந்திருக்க வேண்டும். எனக்குத் தெரியவில்லை, அன்றேல் ஒரு சூரிய மறைப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். இங்கு தொலைக்காட்சியில் இவர்கள் சொல்வது ஒன்றும் எனக்குப் புரிவதில்லை. ஏனென்றால் அவர்கள் பல்கேரிய மொழியில் பேசுவதில்லை. எனவே இங்கு எப்போது சூரிய மறைப்பு இருக்கும் அல்லது இருக்காது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஊரில் என்றால் தொலைக்காட்சியில், எப்போது எங்கு சூரிய மறைப்பு இருக்கும் என்று சொல்வார்கள். எனவே எங்களுடைய இரத்த அழுத்தத்தின் அளவு ஏன் அதிகரித்து அல்லது குறைந்து இருக்கிறது என்பது குறித்து நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம். என்னதான் இருந்தாலும்… 

இன்னொரு விடயம், நான் ஒரு நெடுஞ்சாலைக்கு அருகில் நின்று கொண்டிருப்பது ஞாபகம் இருக்கின்றது. என் மகளுடையதும் மருமகனுடையதும் வீடு குன்றுக்கு அடுத்த பக்கத்தில் இருக்கிறது – எனக்கு வாகன நெரிசல் நிறுத்த விளக்கு வெளிச்சம் தெரிகிறது. அதில்தான் நான் வலது பக்கம் திரும்பி ஏழு நிமிடங்கள் நடந்தால் அவர்களுடைய தெருவுக்கு வந்து விடுவேன். ஆனால் அதற்கு நான் இந்த நெடுஞ்சாலையைக் கடக்க வேண்டும். ஒரு திசையில் மட்டும் 4 அல்லது 5 ஒழுங்கைகள். அதேபோல் எதிர்ப்புறத்திலும் அதே அளவு. மோட்டார் வண்டிகள் விரைவாக பறக்கின்றன – ஃப்யூம்… ஃப்யூம்… ஃப்யூம்…. ஏகப்பட்ட வண்டிகள், ஏகப்பட்ட இரைச்சல். நான் காத்திருக்கிறேன். சரியான தருணத்திற்காக காத்திருக்கிறேன். நான் எனக்குச் சொல்கிறேன், கிறிஸ்டோ கிழவா, நீ இந்தக்  குழப்பத்தைத் தீர்க்க வேண்டும். உன்னுடைய மகள் வீட்டுக்குத் திரும்பி வருவதற்கு முன்பாக நீ வீட்டிற்குப் போய்விட வேண்டும். ஆனால் அதையேதான் எல்லா வண்டிகளும் யோசித்திருக்க வேண்டும் – தங்கள் மகள்கள் வீட்டிற்கு வந்து சேருவதற்குள் வீட்டிற்கு போய்விட வேண்டும் என்று. ஃபியூம்…ஃபியூம்…ஃபியூம். நான் ஒரு நெடுமூச்சை உள்ளிழுக்கிறேன். மூச்சைப் பிடித்துக்கொண்டு, பாதுகாப்புத் தடுப்பிற்கு மேலால் பாய்வதற்கு ஓடுகிறேன். எல்லாம் வல்ல யேசுவே நான் எப்படி இந்த நெடுஞ்சாலையின் நடுப்பகுதிக்குச் செல்லப்போகிறேன். எனக்கு எதுவும் தோன்றவில்லை. 

ஃபியூம்…ஃபியூம்…ஃபியூம். பெரிய பார வண்டிகள் கர்ச்சிக்கின்றன. றார்! றார்!! றார்!! –  என்னைத்  துடைத்து எறிவதற்கு முயற்சிப்பது போல். ஆனால் நான் உறுதியான ஒரே பாய்ச்சலில் ஏற்கனவே நெடுஞ்சாலையின் மையப் பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நான் பாதுகாப்புத் தடுப்பில் காலை வைத்துக்கொண்டு காத்திருக்கிறேன் – அடுத்த பாதையையும் நான் கடந்துவிடுவேன் என்று நான் எனக்குச் சொல்லிக் கொள்கிறேன். திரும்பவும் நான் அங்கே எவ்வளவு நேரம் நின்று கொண்டிருக்கிறேன் என்று என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அடுத்து சைரன் ஒலிகள் எனக்கு கேட்கின்றன. அங்கு காவல்துறையின் இரு வண்டிகள் நிற்கின்றன. அவர்களது வண்டிகளின் வெளிச்சம் மின்னலடிக்கிறது. மீயோவ் மீயோவ் அவர்களுடைய குறுந்தொலைத் தொடர்பு ஒலி இயங்கியில்  ஏதோ பேசுகிறார்கள். அவர்களின் வாகனம் பாதுகாப்புத் தடுப்பின் ஒரு பக்கம் நிறுத்தப்பட்டது, பிறகு ஒன்று, பிறகு இன்னொன்று. காவல்துறை அலுவலர்கள் இறங்குகிறார்கள். அவர்கள் நான்கு பேர். ஒருவன் தடித்த கறுப்பன், அவனுடன் ஒரு இளைஞன், இன்னொரு நடுத்தர வயதானவன் ஆனால் உரம் வாய்ந்தவன், இழிந்த முறைப்புடன் இருந்தான். இவர்களுடன் ஒரு பெண், அவள் எல்லாரையும் விட மோசமான முறைப்புடன் இருந்தாள். அவர்கள் என்னை நோக்கி வருகிறார்கள். அவர்கள் மிகவும் அவதானத்துடன் பேசுகிறார்கள். அந்த முரடானவன் என்னுடைய கையைக் காட்டியபடி எதையோ சொல்லிக் கத்தினான். அவன் என்னைப் பார்த்துக் குரைக்கிறான். அவன் என்ன சொல்கிறான் என்று எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. 

நான் கம்பிச் சுருள் வைத்திருந்த என்னுடைய கையை உயர்த்தி, அவனுக்கு ‘ரெல்’ என்று சொல்கிறேன். அவன் திரும்பவும் என்னை நோக்கி குரைக்கிறான். ‘ரெல்’ நான் சொல்கிறேன். எனக்கு ‘ரெல்’ இற்கான ஆங்கிலச் சொல் தெரியாதவரை நான் வேறு என்ன தான் செய்ய முடியும். நான் அந்த கறுப்பு போலீஸ்காரனை நோக்கித் திரும்புகிறேன், அவன் ஓரளவு நல்ல மனம் கொண்டவனாக இருக்கிறான் போல் எனக்குத் தோன்றியது. “ரெல்” என்று நான் சொல்கிறேன். அவனுடைய தோளில் இருக்கும் குறுந்தொலைத் தொடர்பு ஒளி இயங்கி ஏதோ முணுமுணுக்கிறது. அவன்  தலையை அதை நோக்கிச் சாய்க்கிறான், கேட்டுக்கொண்டிருக்கிறான். ஆனால் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான். 

இளம் போலீஸ்காரனை பாதுகாப்புத் தடுப்புக்கு நெருக்கமாக இருக்கின்ற ஒழுங்கையை மூடச் சொல்லி அனுப்புகிறார்கள். பணிக்குழுவின் கார்களில் உள்ள விளக்குகள் இன்னும் மின்னி மின்னிக் கொண்டிருக்கின்றன. நெடுஞ்சாலையின் வாகனங்கள் எப்படித் திடீரென்று வேகத்தைக் குறைத்தன என்பதனை நான் அவதானிக்கிறேன். 

காவல்துறைப் பெண் என்னை நோக்கி வருகிறாள், அவளும் ஏதோ சொல்கிறாள். ஆனால் எந்தப் பலனும் இல்லை. எனக்குப் புரியாது., நான் குன்றை நோக்கிக் கையைக் காட்டினேன் – நான் ராடோஸ்லாவாவிடம் போய்க்கொண்டிருக்கிறேன், என்னுடைய பேத்தி பள்ளிக்கூடம் போகிறாள். அவள் கஷ்டப்பட்டுப் படிக்கிறாள். என் மருமகன் வேலை அலுவலாக வெளியே போய்விட்டான். அவர்கள் என்னை இங்கு கூட்டிக் கொண்டு வந்து எனக்கு ஒரு ‘சொஷுல்’ வாங்கித் தந்திருக்கிறார்கள், எல்லாம் எதற்காக என்றால், என்னுடைய வாழ்க்கைத் துணை எலேனா… என்ன இருந்தாலும்… நான் அவளுக்கு விடயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இந்தப் பாறை இடுக்கில்தான் இந்தக் கம்பிச் சுருளை எடுத்தேன். நான் இதைத் திருடவில்லை. நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால், இதை திரும்பத் தரவேண்டுமென்றால், உங்களிடம் தந்து விடுகிறேன் என்று அவர்களிடம் விளங்கப்படுத்த விரும்பினேன். நான் அந்தக் கம்பிச் சுருளை காவல்துறைப் பெண்ணின் முன்னால் பிடித்துக் கொண்டிருக்கிறேன், ஐயோ இந்த சொதப்பல்கள் எல்லாம் இந்தப் பாழாய்ப்போன கம்பிச் சுருளால்தான் என்று எனக்குள் நினைத்தபடி.

“அப்பா…! அப்பா!” என்று எனக்குக் கேட்கிறது. நான் அத்திசையில் பார்க்கிறேன். நெடுஞ்சாலையின் மறுபக்கத்தில், ரடோஸ்லாவா. என் மகள் ரடோஸ்லாவா. என்னை நோக்கிக் கையசைக்கிறாள், இரண்டு கைகளையும்  உயர்த்தி அசைக்கிறாள் – அவளுடைய காருக்கு பக்கத்தில்? அது வீதியின் கரைக்கு அருகாமையில் நிற்பாட்டி இருக்கிறது. “அப்பா” அவள் கத்துகிறாள். எனது சின்ன மகள். நானும் எனது கைகளை உயர்த்தி அவளுக்கு கை காட்டுகிறேன். காவல்துறைப் பெண் என் மகளைப்  பார்க்கிறாள். என்னைப்  பார்க்கிறாள். திரும்பவும் மகளைப் பார்க்கிறாள், பிறகு என்னையும் என் ஒரு கையில் உள்ள கம்பிச் சுருளையும் பார்க்கிறாள், என்னுடைய மற்றக்  கையைப் பார்த்து தலையை ஆட்டி அதற்குள் என்ன வைத்திருக்கிறேன் என்பதுபோல் பார்க்கிறாள், சைகை காட்டுகிறாள். 

அப்போது அந்த ‘டொமாட்’ (தக்காளியுடன் இருந்த, வேருடன் இருந்த தக்காளி மரத்தை உயர்த்திப் பிடித்துக் கத்துகிறேன். நெடுஞ்சாலைக்கு மறுபக்கத்தில் நிற்கிற என் மகளுக்கு கேட்கிறது. தக்காளி  என்று நான் கத்துகிறேன். வெற்றிப் பெருமிதத்துடன் உயர்த்திப் பிடிக்கிறேன். கூக்குரலிடுகிறேன்.

To – ma – to ! Tomato ! தக் – கா – ளி ! தக்காளி !

**********

ஸஷாரி கரபாஷ்லிவ் 

இவர் பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர். 1968ம் ஆண்டில் பிறந்த இவர், 1997ம் ஆண்டு தொடக்கம் ஐக்கிய அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் வசித்து வருகிறார். இவர் எழுத்தாளரும் நாடக ஆசிரியருமாவார். இவருடைய முதல் நாவல் 18% Gray (18% சாம்பல்நிறம்). 2008ம் ஆண்டில் பல்கேரிய மொழியில் வெளிவந்த இந்நாவல் ஏழு பதிப்புகளை கண்டது. மற்றும் A Brief History of the Airplane என்னும் சிறுகதை தொகுப்பு 2009ம் ஆண்டில் பரிசு பெற்றது. 


இந்த மொழியாக்கம் ‘எதுவரை’ இணையச் சஞ்சிகையில் 2017ம் ஆண்டு இறுதியில் வெளிவந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s