“ஒருத்தி பெண்ணாகப் பிறப்பதில்லை. பெண்ணாக ஆக்கப்படுகின்றாள்” – சிமோன் தி போவுவா

Le Deuxième Sexe (1949) – Simone De Beauvoir

மொழியாக்கம்: லக்ஷ்மி 

“இரண்டாவது பால்” இன்னும் தனது வலிமையை இழக்கவில்லை. சிமோன் தி போவுவாவின் கலங்கரை விளக்கம் என்று சொல்லக்கூடிய “இரண்டாவது பால்” என்னும் நூலுக்கு 1999ம் ஆண்டு ஜனவரியுடன் ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது.

யார் இந்த  சிமோன் தி போவுவா? 

பெண்நிலைவாத இயக்கத்தில் பிரான்சில் மிக முக்கிய பங்கு வகித்த ஒருவர். எழுத்தாளர். அறிவுஜீவி. இவர் 1908ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி கத்தோலிக்க, மரபு சார்ந்த, ஒரு பூர்சுவா குடும்பத்தில் பிறந்தவர். வழக்கமான கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு, 1929இல் தத்துவவியல் கல்வியைத் தெரிவு செய்கிறார். ஒரு தாயாகவோ அல்லது ஒரு மனைவியாகவோ தன்னை விதிவழிக்குட்படுத்துவதை மறுத்தவர்.

சர்வகலாசாலை பேராசிரியர் தெரிவுக்கான பரீட்சைக்கு அவருடன் ஒன்றாக தோற்றிய ஜோன் போல் சார்த்தருடனான சந்திப்பு “தன்னுடைய இருத்தலில்/வாழ்வில் மிகப்பெரிய நிகழ்வு” என்று அவரது ‘தூ கோந்த் ஃபே’ (Tout compte fait-1972) என்னும் நூலில் கூறுகிறார். சார்த்தருடனான காதல் உறவிலும் புத்தி நுட்பமான உறவிலும் அவருடைய இறுதிக்காலம் வரை உறவு கொண்டிருந்தார்.

ஒரு பெண்ணாகவும் இன்னொருவருடன் இணைந்தும் எப்படி வாழ வேண்டும் என்பதும் குறித்த தனது எண்ணங்களை சார்த்தருடன் இணைந்த வாழ்க்கையில் கடைப்பிடித்தார். அவர்கள் இருவரும் எப்போதுமே திருமணம் (சட்டரீதியாக) செய்து கொள்ளவில்லை. தங்கள் இருவருக்குமிடையிலான உறவுக்கு வெளியே ஒவ்வொருவருக்கான தனிப்பட்ட உறவுகளை இருவரும் அங்கீகரித்தார்கள். சிலவேளைகளில் ஒரு மூன்றாவது நபருடன் முக்கோண உறவையும் கொண்டிருந்தார்கள். இந்த, மிகவும் சுதந்திரமான வாழ்க்கை முறையும் பெண்மையின் கட்டுப்பாடுகள் மீதான இவருடைய சிந்தனை முறைகளும், ஒருவர் இன்னொருவருடன் இணைந்திருக்கும்போது மற்றவரின் உறவுகள் எப்படிப் பேணப்பட வேண்டும் என்பவை பற்றிய சிந்தனைத் தன்மைகளும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்திருக்கவில்லை.

தத்துவவியல் ஆசிரியையாகப் பணிபுரிந்து பின், சார்த்தரினால் நடத்தப்பட்ட ‘லே தோம் மொடேர்ன்’ (Les Temps Modernes) என்னும் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவரானார். எதைப்பற்றியும் தேடல் தன்மை கொண்ட இவர், நீண்ட பல பிரயாணங்களை மேற்கொண்டார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் முதலில் சென்ற இவர், பிற்காலங்களில் கியூபாவிற்கும் ரஷ்யாவிற்கும் சென்றார். இரண்டாவது உலகப் போரின் போதான கொடூரங்கள், அவரின் தத்துவமான இருத்தலியல்வாதத்தையும், இடதுசாரிப் புத்திஜீவித்தனத்தையும், தன்னையும் (பெண்ணாக) மீளாய்வுக்குட்படுத்த வைத்தன. அதன் விளைவுதான் “இரண்டாவது பால்” என்றும் கூறலாம்.

“இரண்டாவது பால்” பெண்களின் வரலாற்றில் ஒரு அடிப்படையான நூலாகத் திகழும் என்று, 1949ம் ஆண்டில் யார் கண்டார்கள்? எவருமே இல்லை. சிமோன் தி போவுவா கூட கனவிலும் நினைக்கவில்லை. அவரை ஈவிரக்கமின்றி தாக்கிய அவரது எதிரிகளோ அல்லது அவருடைய தத்துவரீதியான முன்னெடுப்புகளுக்கு ஆதரவாக இருந்த சார்த்தரும் அவரது நண்பர்களும் கூட, இந்நூல் உலகத்தில் உள்ள  பெண்களை எல்லாம் ஈர்க்கப் போகிறது என்று எண்ணியிருக்கவில்லை.

இந்நூல் இன்னும் காலத்தைக் கடந்து நிற்கிறது. இதன் பிரசித்தி பெற்ற வாசகமான “ஒருத்தி பெண்ணாகப் பிறப்பதில்லை. ஒருத்தி பெண்ணாக ஆக்கப்படுகிறாள்” என்பது, எழுபதுகளில் இருந்து சமத்துவத்திற்காக போராடும் சகல பெண்களையும் தழுவிக்கொண்ட வாசகமாகும். நிச்சயமாக இவர்கள் எல்லோரும் இந்நூலை வாசித்திருக்கவில்லை. ஆனால் உயிரியல் ரீதியாக பெண்ணாக்கப்பட்டிருப்பது என்பது ஒரு விதியல்ல என்பதை நன்கு உணர்ந்து கொண்டார்கள். 

இன்றைய சூழலில் பெண்நிலைவாதிகளுக்கு இது சாதாரணமான ஒன்றாக இருந்தபோதிலும் 1949ம் ஆண்டில் இது அணுகுண்டின் அதிர்ச்சியை கொடுத்தது. இன்றுவரை, பெண்ணானவள் ஆணினால் வரைவிலக்கணப்படுத்தப்பட்ட, ஆணுடன் தொடர்புபடுத்திப் பார்க்கின்ற ஒரு உயிரியாக கணிக்கப்படுகின்றாள். 

இந்நூலானது, பெண்கள் ஆண்களினால் ஒடுக்கப்படுவதையும், நிச்சயமாக, பெண்களின் பாலியல் சம்பந்தமாகவும் மிகவும் தத்துவார்த்தமான ரீதியில் எடுத்துக் காட்டியது. 

வலதுசாரிகளும் இடதுசாரிகளும் ஒரு விசித்திரமான கூட்டுச் சேர்ந்து போவுவாவை அழிப்பதில் அணிதிரண்டார்கள். 

பிரான்சுவா மொரியாக் (François MAURIAC) என்னும் எழுத்தாளர், குழம்பிப் போயிருந்த கத்தோலிக்க எழுத்தாளர்கள் மத்தியில் ‘பெண்களின் பாலியல்’ பற்றிய அத்தியாயம் குறித்து ஒரு புனிதப் போராட்டத்தை எழுப்பினார். “Saint Germain des Prés* (சென் ஜேர்மென் டே பிரே)  இன் இலக்கியம் கேவலத்தின் எல்லைகளைத் தொட்டு நிற்கிறது” என்று குறிப்பிட்டார்.

 ‘லெ மோண்ட்’ (Le Monde) பத்திரிகையும் வேறு பல பத்திரிகைகளும் சிமோன் தி போவுவாவைப் பற்றி மிக கேவலமாகவும் இழிவாகவும் பழித்தும் கேலி பேசியும் எவ்வளவோ எழுதின. 

கம்யூனிஸ்டுகள் கூட, இன்னொரு பக்கத்தில் “பாட்டாளி வர்க்க விடுதலையுடன் பெண்கள் விடுதலை பெற்று விடுவார்கள்” என்ற கோஷத்தை மீண்டும் வலியுறுத்தி “ஒடுக்குபவன் ஆண் என்று கூறுவதில் சிமோன் தி போவுவா தவறிழைக்கின்றார்” என்று கூறினர். 

சிமோன் தி போவுவா பின்வருமாறு கூறுகிறார் : “பால்களிற்கிடையில், நாங்கள் இன்னும் கண்டுகொள்ளாத சரீர சம்பந்தமான புதிய உறவுகளும், மனக் கிளர்ச்சிகளும் உருவாகும்; ஏற்கனவே பெண்கள் ஆண்களிற்கிடையில் நட்புகள், போட்டிகள், தோழமைகள், பாலுறவுகள், இணைந்து குற்றம் புரிதல் இப்படி எத்தனையோ இருந்திருக்கின்றன. ஆனால் இத்தனை நூற்றாண்டுகள் உருண்டோடியும் இவைகளைப்பற்றி எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.”

“இரண்டாவது பால்” எழுதி 20 வருடங்களின் பின்பு தான் சிமோன் தி போவுவா ஒரு பெண்நிலைவாதியாகிறார். இந் நூற்றாண்டின் குறிப்பிடக்கூடிய ஒரு நூலாகத் தன்னுடைய “இரண்டாவது பால்” இருக்கும் என்று அவர் ஒருபோதும் எண்ணவில்லை. சார்த்தருடன் ஒப்பிடும்பொழுது தன்னை எப்போதும் அவரிலும் தாழ்ந்த ஒரு நிலையில் உள்ள ஒரு தத்துவவியலாளராகவே கருதினார்.

ஏனைய ஆங்கில மொழிபேசும் நாடுகளுடன் ஒப்பிடும்போது, சிமோன் தி போவுவாவைப் பற்றிய நூல்கள் குறைவாகவே பிரான்சில் வெளியாகியுள்ளன என்பது கவனத்திற்குரியதாகும்.

இவர் நிறைய ஆய்வுக் கட்டுரைகளும், சில நாவல்களும் எழுதியுள்ளார். இவற்றுள் “இரண்டாவது பால்” தான் உலகப் பிரசித்தி பெற்றது. இது சமூக, வரலாற்று, பெண்மையின் அந்நியமாதல், உளவியல் பார்வைகளில் இருந்து வடிக்கப்பட்ட ஒரு சிறந்த நூலாகும். 

ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் கிடைக்கும் இந்நூல் தமிழுக்குக் கிடைக்காமல் இருப்பது ஒரு வகையில் இழப்புத்தான்.

சிமோன் தி போவுவா 1986ம் ஆண்டு ஏப்ரல் 14ம் திகதி காலமானார்.

***************

Christine Delphy என்னும் சமூகவியலாளியாலும், Sylvie Chaperon என்னும் வரலாற்றாசிரியையாலும் முன்னெடுக்கப்பட்டு ஒழுங்கு செய்யப்பட்ட, ஏறத்தாழ 37 நாடுகள் கலந்து கொண்ட (ஈரான், லெபனான் உட்பட), இந்த ‘இரண்டாவது பால்’ இன் 50 வது வருட சர்வதேச ஒன்றுகூடல் பாரிஸின் சோர்போன் பல்கலைக்கழகத்தில் 1999ம் ஆண்டு ஜனவரி 19-23ம் திகதிகளில் நடைபெற்றது.

**************

1980களில் சிமோன் தி போவுவாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட ‘புதிய பெண்ணிய பிரச்சினைகள்’ (Nouvelles Questions Féministes)  என்னும் சஞ்சிகையின் பொறுப்பாளரும் சமூகவியலாளியுமான கிறிஸ்டின் டெல்பி  (Christine DELPHY) உடனான  ஒரு நேர்காணல்.

கேள்வி: இப்பொழுது, பாரிஸில் ‘இரண்டாவது பால்’ பற்றிய இந்த மாநாடு ஏன் தேவை என்று கருதுகிறீர்கள்? 

கிறிஸ்டின் டெல்பி:

 ‘இரண்டாவது பால்’ 1949 இல் வெளியிடப்பட்டது. 

வேர்ஜினியா வூல்ப் இன் ‘உனக்கென்றொரு இடம்’ (A room of one’s own – 1929): இது எங்களுடைய சமூகத்தில் பெண்ணின் நிலை பற்றியது. இது 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. 

அதேபோல் பிரான்சில் வெளியான “இரண்டாவது பால்”இன் தோற்றத்தையும் சிமோன் தி போவுவாவையும் இங்கு நினைவுகூரல் அவசியமாகின்றது. இந்த நூல் பிரான்சை விடவும்  ஏனைய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டும் படிக்கப்பட்டும் உள்ளது. 

அவருடைய சுயசரிதையின் மீதும் அவர் மீதான கட்டுக்கதைகளினதும் மீதான சந்தேகங்களை விட்டுவிட்டு அவருடைய ஆய்வுகளைப் படிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

உதாரணத்திற்கு, போவுவாவை பிரெஞ்சு சர்வகலாசாலைகளில் கற்கைநெறிக்காக தெரிவு செய்வது மிகவும் கடினமானதென்று உங்களுக்குத் தெரியுமா? 

ஆனால் உலகின் மற்றெல்லா பகுதிகளிலும் இவரைப்பற்றிய ஆய்வுகளும் கட்டுரைகளும் ஒவ்வொரு வருடமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நூல் உலகப் பிரசித்தி பெற்றதாகவும், இன்னும் நாட்கடந்து விடாமல் இருக்கும் ஒரு ஆய்வு என்பதும், இது பிரான்சில் தான் உருவானது என்பதும் அவருடைய பெருமையை நாங்கள் அறிந்திருக்கிறோம் என்பதும் இம் மாநாட்டிற்கான ஒரு காரணமாக அமைகிறது.

சாதாரண மக்களை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டுப் பார்த்தால், பெரும்பாலான பெண்நிலைவாதிகளினால் போவுவாவின் பால்களின் சமூகக் கட்டமைப்புப் பற்றிய அவரது கண்டுபிடிப்புகள் உண்மையில் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை அல்லது இவைகள் ஆழ்மன உணர்வுகளுடன் சம்பந்தப்படுகின்றதனால் சமூகத்துடன் சரியாக இன்னும் இணைக்கப்படாமல் உள்ளது.

மேலும், தன்னை உலகத்தின் சிந்தனை மையம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டின் புத்திஜீவித்தனத்தைக் (?) கண்டு கொள்ள ஒரு வாய்ப்பாகிறது இம் மாநாடு. 

நாங்கள் இங்கிருந்து ஆங்கிலக் கால்வாயை கடந்தாற் போதும், இன்னொரு கண்டத்தில் இருப்போம். அங்கு பெண்நிலைவாதக் கற்கைநெறிகளை மேற்கொள்வது அப்படியொன்றும் குழப்பம் நிறைந்ததல்ல.

ஒருவேளை இது மீள்சிந்தனைக்கான ஒரு நேரமாக இருக்கலாம்.

இம் மாநாட்டின் நோக்கம், இங்கு அலட்சியப்படுத்தப்படும் போவுவாவைப்பற்றி, ஆங்கிலம் பேசும் நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து அக்கறை கொள்வதற்கும் தான்.

 சிமோன் தி போவுவா “இரண்டாவது பால்” எழுதியபின் இறந்து விடவில்லை. அதற்குப் பின்பும் 37 ஆண்டுகள், தொடர்ந்து சிந்தனையிலும், எழுத்திலும், பிரதிபலிப்புகளிலும் வாழ்ந்தார். 

அமெரிக்கச் சர்வகலாசாலைகளில் எண்ணுவது போலல்லாது, தன்னுடைய காலத்தில் நடந்த அனைத்து எதிர்ப்பியக்கங்களிலும், எழுபதுகளில் நடந்த பிரெஞ்சு பெண்நிலைவாத இயக்கம் உட்பட, ஈடுபட்டார்.

கேள்வி: சிமோன் தி போவுவாவின் ‘இரண்டாவது பால்’ குறித்து, அவரின் தாய்மை பற்றிய கோட்பாடு மீது அதீதமான அதிருப்தி அடைந்துள்ளதாக அநேகமான பெண்கள் கூறும் இக்கோட்பாடு பற்றி உங்கள் விளக்கம் என்ன?

கிறிஸ்டின் டெல்பி:

முதலில் பெண்நிலைவாதத்தினைக் கருத்தில்கொண்டு,  உண்மையான, நடைமுறையிலான எதிர்விளைவுகள் பற்றிக் குறிப்பிடலாம். பெண்நிலைவாதத்திற்காக, பெருஞ் செய்தி ஊடகங்கள் கூட, எப்போதுமே இது குறித்த பிரக்ஞை கொண்டிருக்காதவிடத்து, இன்றைக்கும் பிரான்சில் ‘மீளாய்வு செய்தல்’ பற்றிப் பேசுவது என்பது மிக கடினமானது.

நாங்கள் எப்போதுமே பெண்நிலைவாதம் பற்றி பேசியதில்லை. ஆனால் திடீரென்று அது இறந்து விட்டது என்று கூறுகின்றோம்.  

எனக்கு தெரியும், பிரான்சில் உள்ள பெண்கள் இயக்கத்தில் ஒரு குழு தன்னை ஒரே ஒரு ‘பெண்ணின் விடுதலைக்கான இயக்கம்’ என்று பிரகடனப்படுத்தியதனால் குழப்பம் ஒன்று கோலோச்சிக் கொண்டிருந்தது.

ஊடகங்கள் தங்களிற்கு ஒரு தெளிவான செய்தி தேவை என்ற வரையறைக்குட்பட்டு, இந்தப் பனிமூட்டங்களுக்குள் பெண்நிலைவாதிகளை ஓரங்கட்டுவதற்கு அவர்களுக்கு ஒரு சாட்டுக் கிடைத்தது. இன்று வெளிப்படையாகக் கூறினால், நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை இந்தச் செய்தி ஊடகங்கள் கண்டுகொள்ள வேண்டும் என்று எண்ணுகிறோம்.

ஒரு விடயம் ‘காலம் கடந்துவிட்டது’ என்பதன் அர்த்தத்தை உண்மையில் விளங்கிக்கொள்ள வேண்டும். பிரான்சில் பெண்நிலைவாதம் எப்போதும் ‘காலம் கடந்ததாகவே இருந்தது’ என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். 1970களில் இயக்கம் ஆரம்பித்தபோதே எங்களிடம் கூறினார்கள் : “பெண்களிற்குத்தானே எல்லாம் இருக்கின்றன. இது எதற்கு பிரயோசனப்படும்?” என்று. ஆனால் இப்போது 30 வருடங்களின் பின், பெண்நிலைவாதம் இருந்ததென்றும் அது தேவையாக இருக்கிறது என்றும் ஒத்துக் கொள்கிறோம். 

“பெண்களுக்கு எல்லாமே இருக்கிறது” என்பதால் அது பிரயோசனப்படாமற் போயிருந்திருக்கலாம். நாங்கள் எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கின்றோம் என்று பாருங்கள்.

இப்படியான கருத்துக்கள் பெண்களினால் ஏற்றுக் கொள்ளப்படும் பொழுது அவர்கள் சம்பிரதாயங்களை துறந்து விடும் நிலையில் இருக்கிறார்கள். இந்தக் காலத்தின் யதார்த்தம் என்பது மாற்றத்தை, சீர்திருத்தத்தை வேண்டி நிற்கும் காலம். நான் நினைக்கின்றேன், இன்னும் 20 ஆண்டுகளில் இந்தத் 90கள், அரசியல்ரீதியான திட்டமிடலில் ஒரு பயங்கரம் என்பதை உணர்ந்து கொள்வோம்: “அங்கு கைகளுக்கு எட்ட முடியாத தூரத்தில் ஒரு மைதானம் இருந்ததை நாங்கள் முடிவு செய்தோம். அங்கு நாங்கள் எல்லா அசமத்துவங்களையும் ஏற்றுக்கொள்கிறோம். அங்கு ஈரினச் சேர்க்கையாளர்களைப் போலவே ஓரினச் சேர்க்கையாளர்களும் மணம் புரிவதைக் கண்டு கொள்கிறோம். அங்கு யாருமே சமுதாயத்தை மாற்றுவதற்கான ஒரு இலட்சியத்துடன் இல்லை.”

கேள்வி: முன்னொரு காலத்தில் நாங்கள் குறிப்பிட்ட ‘பெண்’ பற்றிப் பேசினோம். ஆனால் பெண்நிலைவாதம் அதனைப் பன்மையில் ‘பெண்கள்’ பற்றிப் பேசுவதற்கு நிர்ப்பந்தித்தது. ஆனால், புதிய திருப்பம், அது ஒரு ஸ்தூலப்பொருள் என்றாகிவிட்டது. அப்படியல்லவா?

கிறிஸ்டின் டெல்பி:

நான் இதை மறுக்கிறேன். நான், பொதுவாக, பெண்களைப் பற்றிப் பேசவில்லை அல்லது பெண்களின் நடவடிக்கைகளைப் பற்றி பேசவில்லை. இவையெல்லாம் எதைச் சொல்கின்றன என்பதில் கூட அலட்சியமாகத்தான் இருக்கிறேன். “பெண்நிலைவாதிகளின் போராட்டம் என்பதும் பெண்களின் போராட்டம் என்பதும் ஒன்றல்ல”

இங்கு பிரான்சில், ‘பெண்களின் விடுதலை இயக்கம்’ என்பதில் ‘விடுதலை’ என்பது  எப்படியோ ஆச்சரியத்திற்குரிய வகையில் மறைந்து இப்போது ‘பெண்கள் இயக்கம்’ ஆகிவிட்டது. இது, ‘பெண்கள்’ என்பது எதைக் குறிக்கின்றது என்பதையும் அவர்களுடைய ஈடுபாடுகள் என்ன என்பதையும் அவர்கள் எல்லாருமே ஒரே விதமான ஈடுபாடுகள் கொண்டிருப்பார்கள் என்பதையும் முன் அனுமானிக்க வைக்கிறது. 

அப்படியே அவர்கள் எல்லோருக்கும் ஒரே வகை ஈடுபாடுகள் இருக்கின்றன என்பதை அனுமதித்தாலும், எல்லாப் பெண்களும் ஒரே விதமான ஈடுபாடுகளை ஒரே விதமாக பார்க்க மாட்டார்கள். ஒரே விதமாக அணுக மாட்டார்கள். மேலும் பெண்நிலைவாதிகள் என்பது இன்னும் ஒரு விசேஷமான பிரிவிற்குள் அடங்கும். அவர்களுக்கிடையில் கூட ஒரே விதமான சிந்தனைப் போக்குகள் இல்லை.

கேள்வி: எனவே, இது ஒரு ஸ்தம்பிதமான நிலை என்று எண்ணுகிறீர்களா?

கிறிஸ்டின் டெல்பி:

இல்லவே இல்லை. நாட்டைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் எல்லாரும் ஒரே விதமான பார்வையைக் கொண்டிருக்கிறார்களா? அப்படித்தான். பெண்நிலைவாத போராட்டம் என்பது ஒரு அரசியல் போராட்டமாகும். அதற்குள் சமத்துவத்தைப் பற்றி இன்னும் மிகக் கடுமையான வாக்குவாதங்கள்/ விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, ‘பெண்’, ‘ஆண்’ என்பவை இயற்கையிலமைந்ததெனக் கருதும் திட்டவட்டமான வரையறுத்தல்களுடன் நான் முரண்படுகின்றேன். இந்த ‘பெண்கள்’, ‘ஆண்கள்’ என்பவை என்ன என்ற தேடல்களும் ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற வேண்டிய தேவை உள்ளது என்று எண்ணுகிறேன்.

*************

‘மேற்கத்தைய பெண்களின் வரலாறு’ (Histoire des femmes en Occident 1990-1991)  நூலின் துணை ஆசிரியரும் ‘பெண்கள் அல்லது வரலாற்றின் மௌனங்கள்’ (Les Femmes ou Les silences de l’histoire 1998) என்னும் நூலின் ஆசிரியருமான  மிஷெல் பெரோட் (Michelle Perrot) என்னும் வரலாற்றாசிரியையுடனான ஒரு நேர்காணல்

கேள்வி: 1949ம் ஆண்டு “இரண்டாவது பால்” வெளிவந்தபோது, அதனை எப்படி எதிர்கொண்டார்கள்?

மிஷெல் பெரோட் : 

இந்த வெளியீடு பிரமிக்கத்தக்க சர்ச்சைகளை அல்லது வியக்கத்தக்க வாக்குவாதங்களை உருவாக்கியது. Figaro Littérature (பிகரோ லிற்றரதுர்) என்ற பத்திரிகையில் பிரான்சுவா மோரியாக் (François Mauriac) என்னும் எழுத்தாளர் இது குறித்த ஒரு விவாதத்தைத் தொடக்கினார். ‘Les Temps Modernes’ என்னும் சஞ்சிகையின் மீது மிகுந்த வெறுப்பும் ஆத்திரமும் கொண்டு “உங்களுடைய தலைவியின் யோனியைப் பற்றி நாங்கள் எல்லாவற்றையும் அறிந்து கொண்டோம்” என்று கூறினார். பெண்களின் பாலியல் தொடர்பான சிமோன் தி போவுவாவின் பகுப்பாராய்வினால் கத்தோலிக்கர்கள் மத்தியில் மிகுந்த குழப்பங்கள் உண்டாகின. இது இப்படி இருக்க, கம்யூனிச புத்திஜீவிகள் இதனை ஒரு ‘பிற்போக்கான’ நூலென்று எடை போட்டனர். கோபமும் வெறுப்பும் எல்லைகளைத் தாண்டியது. மொத்தத்தில் ஒரு கலகத்தைத் தோற்றுவித்தது.

கேள்வி: இந்த நூல் எந்த வகையில் அதிர்ச்சியைத் தோற்றுவித்திருக்க முடியும்?

மிஷெல் பெரோட்: 

சிமோன் தி போவுவா பெண்களினுடைய பாலியல் தொடர்பாக நாசூக்காக கூறுவதை விட்டுவிட்டு நேரடியாக விபரிப்பதற்கு துணிந்திருக்கிறார். 

அவர் யோனி பற்றியும், அது குறித்து இன்னும் ஆழமாகவும், மாதவிடாய் பற்றியும் இன்னும் பெண்களின் பாலியல் இச்சை பற்றியும் அப்பட்டமாகப் பேசுகிறார். இவைகளெல்லாம் அன்றைய காலத்தில் பேசப்படக்கூடாதவை என்று கருதப்படும் விடயங்களாயிருந்தன. 

உதாரணமாக, தலைநகருக்கு வெகு தொலைவில் இருக்கும் நகரமொன்றில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் கல்லூரி மாணவி ஒருத்தி தனது பாட்டியிடம் முதலிரவு பற்றி மேலும் விரிவாக அறிந்து கொள்ளும் பொருட்டு சில விளக்கங்களைக் கேட்கிறார். அதற்கு அந்தப் பெண்ணுக்குக் கிடைத்த பதில்: “என்ரை அம்மா, நீ அதைப் பற்றிக் கவலைப்படாதே. அது உடனேயே முடிஞ்சிடும்”. இப்படித்தான் நிலைமை என்றிருந்தது.

கேள்வி: பெண்கள் பக்கமிருந்து இந்நூலுக்குச் சார்பாக ஒருமைப்பாட்டுத் தன்மை இருந்ததா?

மிஷெல் பெரோட்: 

உண்மையில் இல்லை என்றுதான் கூறவேண்டும். இளம்பெண்கள்(புரட்டஸ்தாந்து) இயக்கத்தை தவிர ஏனைய பெண்கள் அமைப்புகள் அமைதி காத்தன. ஆனால் பெருந்தொகையான பெண்கள் இந்நூலை வாங்கினார்கள். அதிகூடிய விற்பனைக்குரிய புத்தகமாக இது இருந்தது. அதிர்ச்சியடைந்த சிலர், சிறிது காலத்திற்கு அதை அப்படியே மூடி வைத்துவிட்டனர். வேறு சிலர் அதை விமர்சிப்பதற்கான பல விடயங்களை அது கொண்டிருந்தது என்று கருதினார்கள். ‘நிரந்தரமான பெண்மை காத்தல்’ என்பதுதான் அன்றைய ஆதிக்க மொழியாக இருந்தது.

கேள்வி: இப்படியான இப்பாவனையைப் பெண்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்களா?

மிஷெல் பெரோட்: 

நிச்சயமாக. விவாதங்களில்/ பேச்சுகளில் இவற்றை மீறினாலும் நடைமுறையில் ஒழுக்க நடத்தைகளில் மிகவும் சம்பிரதாய ரீதியானவர்களாகவே இருந்தார்கள். பிரான்சின் வடமேற்குப் பிராந்தியத்தில் அமைந்த கல்லூரி ஒன்றில், ஐம்பதுகளின் நடுப்பகுதியில், ஒரு ஆசிரியர் தன்னுடைய மாணவர்களிற்கு சிமோன் தி போவுவாவையும் சார்த்தரையும் கற்றுக்கொடுத்ததற்காக மாணவர்களின் பெற்றோர்களினால் குற்றஞ்சுமத்தப்பட்டார். 

அதே சமயத்தில், 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அனைத்து எதிர்ப்புக்களையும் மீறி, பெண் பிள்ளைகள் ஆசிரியத் தொழிலை நோக்கி ஒரு மெதுவான அசைவினை ஏற்படுத்தினார்கள். இந்த மாற்றத்தின் விளைவுதான் சிமோன் தி போவுவா. 

இவர் மட்டுமல்ல பல பெண்கள் அறிவு சம்பந்தமான பல துறைகளிலும் இடம் பிடிக்கிறார்கள். 1928-1936 வரையிலான பகுதியில் இனங்களியல் துறையில் கல்வி கற்கப் பங்குபற்றிய பெண்களின் தொகையை கண்டு அதிர்ந்து போனோம்.

கேள்வி: பெண்களிடமிருந்து புறப்பட்ட போராடும் தன்மை அல்லது எதிர்ப்புத்தன்மை சிமோன் தி போவுவாவிடம் இருந்துதான் ஆரம்பிக்கின்றதென்று கூறலாமா?

மிஷெல் பெரோட்: 

பெண்நிலைவாதமானது மிகவும் பழமையானது. ஆனால் வரலாறுகள் இவை பற்றிப் பேசுவதில்லை. சிமோன் தி போவுவா இது குறித்து மிகக் குறைந்த அறிவைத்தான் கொண்டிருந்தார். இவர் மனிதவியல் விஞ்ஞானிகளிடம் இருந்துதான் பெண்கள் தொடர்பான உண்மைகளை பெற்றுக் கொள்கிறார். மற்றும், பால்கள் சம்பந்தமான வழி முறைப்படுத்தப்பட்ட ஒரு பார்வையைக் கொண்டிருந்தார். அவர் பின்வருமாறு எழுதுகின்றார். “பெண்களின் வரலாறானது ஆண்களினால் தான் ஆக்கப்பட்டது. பெண்கள் இந்த ராஜ்யத்துக்குள் எப்போதும் அவர்களுடன் முரண்பட்டதில்லை.” தன்னுடைய காலத்தில் பெண்களுக்கென்று ஒரு வரலாறு இருந்தது என்பதை மறுக்கின்றார். இதைத்தான் எல்லா வரலாற்றாசிரியைகளாலும் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

கேள்வி: பெண்நிலைவாதம் பற்றி சிமோன் தி போவுவா என்ன நினைக்கிறார்?

மிஷெல் பெரோட்: 

பெண்நிலைவாதம் சுய ஆளுமைக்கு தடையாக இருக்கிறதென்றும் மிகக் குறைந்த பெண்களே உண்மையில் ‘நல்ல பெண்கள்’ ஆக, அதாவது பெண்நிலைவாதிகளாக இருக்கின்றார்கள் என்று கருதுகின்றார். 

உலகத்தின் திறவுகோல் அவருடைய கண்களுக்கு ஆண்மயப்பட்டதாகத்தான் தெரிகிறது. விடுதலையை வேண்டிய பாதையில் நிற்கும் அநேக பெண்களைப்போல இவர் பெண் வெறுப்பாளர். 

இவருடைய லட்சியம் என்னவென்றால் ஆண்களின் உலகத்தை, அவர்களுடைய அறிவை, அவர்களுடைய எழுத்துலகத்தை அடைதல். சார்த்தருடனும் அவருடைய நண்பர்களுடனும் அவர் தன்னைச் சமனாக உணர்ந்தார்.

பளிச்சென்ற கண்ணை கவரக்கூடிய பெண்நிலைவாதம் என்று ஒன்று இல்லை. ஆனால் மிகவும் சிறுபான்மை அளவிலான பெண்கள் அமைப்புகளும் இயக்கங்களும் சிவில் சமத்துவத்துக்கும் கருத்தடை உரிமைக்கும் கோரிக்கை விடுத்தார்கள். 

Madeleine PELLETIER என்னும் பெண் வைத்தியர் ஒருவர், 1914க்கு முன்னரே கருத்தடைக்கும் கருக்கலைப்புக்குமான போராட்டத்தைத் தொடங்கினார். இவருக்கு மனநிலை சரியில்லாததால்தான் இப்படியான விடயங்களில் ஈடுபடுகிறார் எனக் கூறி, இவரை மனநோய் வைத்தியசாலையில் அனுமதித்து, 1939இல் அந்த வைத்தியசாலையிலேயே இறந்தார். 

மொத்தத்தில் பெண்கள் பிறப்பு கட்டுப்பாட்டிற்காக குரல் கொடுத்தார்கள். 1956இல் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இவைகள் எல்லாவற்றையும் மறுத்து சிமோன் தி போவுவா தனது சிந்தனைகளை வளர்த்தார். இவரது சிந்தனைகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

கேள்வி: சிமோன் தி போவுவாதான் இதன் கண்டுபிடிப்பாளர் என்று முற்றாகக் கூறமுடியாது அப்படித்தானே?

மிஷெல் பெரோட்: 

ஆம். ஆனால் அவர் பெருமளவில் எழுதும் புத்திஜீவி. பெண்களின் பாலியல் பற்றிப் பேசும் தன்மையில் அவர் புதுமையை புகுத்தி இருக்கிறார். 

ஒரு பெண்ணுடன் இயற்கையாகப் பெண்மை பிணைந்திருக்கும் என்ற கருத்தை முதன் முதலில் மறுத்த பெண்ணாவார். 

“ஒருத்தி பெண்ணாகப் பிறப்பதில்லை. பெண்ணாக ஆக்கப்படுகின்றாள்” என்பது அவருடைய பிரசித்தமான வாசகம்.

இந்த வகையில் “இரண்டாவது பால்” என்னும் நூலில், பெண்கள் தங்களுடைய உடலையும் கல்வியையும் ஆளத் தெரிபவர்களாக இருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறார். 

பெண்களுக்கு விதிக்கப்பட்ட விதி என்று எதுவுமில்லை. அவர்கள் மனைவிகளாக, வீட்டுப் பணிப்பெண்களாக, தாய்மாராக இருக்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டிருக்கும் விதியானது இயற்கையால் பிறப்பிக்கப்பட்டதல்ல. 

இந்த விதமான இவருடைய பார்வையில், இவருடைய விவாதங்கள் மிகவும் நவீனத்துவமானவை. 

அமெரிக்கர்கள் பால்களிற்கிடையிலுள்ள வித்தியாசத்தை இயற்கையுடன் தொடர்புபடுத்தாது, கலாச்சாரத்துடனும் வரலாற்றுடனும் தொடர்புபடுத்தி ஆய்வு செய்கிறார்கள்.

கேள்வி: அமெரிக்காவில் உள்ளதைப்போல பெண்களின் வரலாறு, பெண்ணியம் சம்பந்தமான சிந்தனைகள் என்பன பிரெஞ்சு சர்வகலாசாலைகளில் ஒரு துறையாக வரித்துக்கொள்ளப்படாததன் காரணம் என்ன?

மிஷெல் பெரோட்: 

இங்கு 6 அல்லது 7 பல்கலைக்கழகங்களில் மட்டும்தான் இதற்கான சாத்தியப்பாடுகள் உண்டு. இது குறித்து நாம் வருந்த வேண்டும்.

பெண்நிலைவாதக் கண்டுபிடிப்புகளை தீவிரமாக எதிர்க்கும் தன்மையும், அதனை விரும்பாத தன்மையும் இன்னும் இதை ஒரு தீவிரவாதப் போக்கான விமர்சனமாக கொள்ளுதலும் இக்கற்கை நெறிகள் ஒரு திறந்த தளத்திற்கு வராததற்கான காரணங்களாகும். 

இப்படியான தடைகளுக்கு முன்னால், சர்வகலாசாலை பெண்கள், இவைகளிற்குத் தங்களைப் பழக்கப்படுத்தி, உள்ளுக்குள் போராடும் வழிமுறைகளைத் தெரிவு செய்துள்ளார்கள் என்று கூறலாம். 

அநேக தோல்விகளுக்கிடையில் சில வெற்றிகளையும் பெற்றிருக்கிறார்கள் எனலாம்.

இது குறித்த உண்மையான புரிதலுக்கான தேவை உள்ளது. அதற்காக நிறைய வேலைகள் செய்யவேண்டியுள்ளன.

கேள்வி: மாணவிகள் இப்படியான கல்வியில் பிரத்தியேகமாக ஆர்வம் காட்டுகிறார்களா?

மிஷெல் பெரோட்: 

பழைய போராட்ட நிகழ்வுகள் எல்லாம் மறந்து, குறைந்த அளவு போராட்ட உணர்வு உள்ளவர்களாகவும், சீரிய அக்கறை இல்லாதவர்களாகவும் இருக்கின்றார்கள். 

பெண்நிலைவாத எதிர்ப்புக்கு பழையன பற்றிய மறதியும் ஒரு காரணமாகின்றது. நிச்சயமாக, நடந்து போன நிகழ்வுகளிற்குள் திரும்பத்  திரும்ப மூழ்கக் கூடாது தான். 

ஆனால் இவை ஒன்றும் ஆகாயத்திலிருந்து விழுந்து விடாது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். 

இந்த மகாநாட்டின் தேவையும் அதுவாகத்தான் இருக்கிறது.

கேள்வி: பிரான்சில் பெண்களை இன்னும் அணி திரட்டுவதற்கான தேவை என்ன? இன்னும் அவர்கள் பெற்றுக் கொள்வதற்கு என்ன எஞ்சி இருக்கிறது?

மிஷெல் பெரோட்: 

அரசியல், பொருளியல், விஞ்ஞானம், உயர் தொழில்நுட்பம் என்னும் துறைகளில் நுழைவதற்கு இன்னும் தடையாக இருக்கும் எல்லா அரண்களையும் உடைத்தெறிய வேண்டிய தேவை உள்ளது. 

உதாரணத்திற்கு, குழந்தைகளுக்கான வீடியோ விளையாட்டுக்களை எடுத்தால், அவை பெரும்பாலும் ஆண்குழந்தைகளிற்காகத்தான் தயார் செய்யப்பட்டவையாக இருக்கின்றன. இதனால் பெண் பிள்ளைகள் அநேகமாக அதன் பக்கமே போவதில்லை. 

பால்களிற்கிடையிலான வேறுபாட்டின் பெறுமதி இன்று வரை மாறாமலேயே உள்ளது. கீழைத்தேய நாடுகளில் கோடிக்கணக்கான பெண் குழந்தைகளைப் பிறப்பிலேயே கொன்று விடுகிறார்கள். 

ஆனால் வளர்ச்சி அடைந்ததாக கூறிக்கொள்ளும் நாடுகளில்கூட இது தொடர்பான எண்ணம் அதிக அளவு வித்தியாசம் அடையவில்லை. 

கடந்த மூன்று ஆண்டுகளின் முன், அமெரிக்காவில் எடுத்த கணக்கெடுப்பின்படி, “நீங்கள் ஒரு குழந்தைதான் பெற முடியும் என்றிருந்தால், அது என்ன குழந்தையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? ” என்ற கேள்விக்கு ‘ஆண் குழந்தை’ என்று 80%மான ஆண்களும் 50%க்கும் அதிகமான பெண்களும் பதிலளித்திருந்தார்கள். 

*Saint Germain des Près – பாரிஸின் 6ம் வட்டாரத்தில் சிமோன் தி போவுவா வசித்த பகுதி.


குறிப்பு: 

இந்த கட்டுரை மொழியாக்கம் முதலாவது ‘உயிர்நிழல்’ சஞ்சிகையில் (ஜனவரி – பெப்ரவரி 1999) வெளியாகியது. 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s