அம்மா இப்போது இல்லை.
நீங்கள் இனி இல்லை என்ற செய்தி எனக்கு கிடைக்கும்போது அது ஒன்றும் ஆச்சரியமான செய்தியாக இருக்கவில்லை. உங்கள் மகன் உங்களை விரைவில் கூப்பிட்டு விடுவான் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தீர்கள். எனக்கு வந்த கவலை உங்களை அடிக்கடி வந்து பார்க்காமல் இருந்ததால் வந்ததுதான். ஆனால் நான் ஏன் உங்களைப் பார்க்க வரவில்லை. நீங்கள் நினைத்துக் கொண்டிருந்திருப்பீர்கள் உங்கள் செல்வம் சென்றதும் நான் உங்களை மறந்து விட்டேன் என்றுதான். பல உறவுகள் தொடர்புகளினால் மட்டும் பேணப்படக் கூடியவை. சில உறவுகள் மட்டுமே அவ்வாறின்றி வலுவானவை. அவை மனதுக்கு மட்டுமே வெளிச்சம்.
அம்மா, சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். கவலைகளையும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் வேதனைகளையும் வலிகளையும் பகிர்ந்து கொள்ள முடியாது. அதைப் பகிர்வதற்கு என்று இன்னொருவர் இல்லையென்று வருந்துவது ஒரு வகையில் அபத்தமானது.
உங்கள் செல்வம் உங்களை விட்டுப் போன பின் நான் உங்களைக் காண்பதைத் தவிர்த்தேன். ஏன் பேசுவதையும் கூடத்தான். ஏனென்றால் உங்களுக்கு என்னைக் கண்டதும் முதலில் எழும் எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாமே செல்வம்தான். நான் அந்த ஓலங்களையும் ஏக்கங்களையும் கேட்குமளவுக்கு இன்னும் பக்குவப்படவில்லை. அந்தப் பக்குவம் வரும் வரை காத்திருக்கிறேன். அம்மா நீங்கள் உங்களுடைய இளம் வயதில் தன்னந் தனியாக பிள்ளைகளை ஆளாக்குவதற்கு பட்ட கஷ்டங்களை கேட்டிருக்கிறேன். எவ்வளவு தன்னம்பிக்கையுடன் விடாப்பிடியாக அந்தக் காலங்களைக் கடந்திருக்கிறீர்கள். அந்த வைராக்கியம் பெரியது.
நீங்கள் என்னை மருமகள் என்று அழைத்த போதும் கூட, நான் உங்களை எப்போதும் அம்மா என்றுதான் கூப்பிட்டிருக்கிறேன். அம்மா உங்களை நான் பெரிய இடத்தில் வைத்திருக்கிறேன். இந்தச் சமூகத்தில் ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும் என்று எத்தனையோ வரைவிலக்கணங்கள் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் நீங்களும் நானும் வாழ்ந்திருக்கின்றோம். உங்கள் மீதான எனது மரியாதை ஏன் என்று தெரியுமா? என்றைக்குமே எனது சுதந்திரத்தில் தலையிட்டதில்லை. எதையும் என் மீது திணிக்க முயன்றதும் இல்லை. என்னுடைய அபிப்பிராயங்களை என்னுடையவையாகவே இருப்பதற்கான மதிப்பை அளித்திருந்திருக்கிறீர்கள். இது உங்கள் வயதையொத்த பலரால் இயலாதது. அதில் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள்.
நீங்கள் விரும்பியபடியே உங்கள் செல்வத்திடம் இப்போது போய்ச் சேர்ந்து விட்டீர்கள்.
வாழ்தல் என்பது பல சமயங்களில் கடினமானது.
உங்கள் நினைவுகளோடும்
உங்கள் மருமகள்
லட்சுமிப்பிள்ளை
20.04.2009
சிறு குறிப்பு :
கலைச்செல்வனின் அம்மா எங்களை விட்டு பிரிந்த பொழுதில் அவருக்கு அஞ்சலி செலுத்துமுகமாக கவிஞர் திருமாவளவன் ஒரு நூலை வெளியிடும் போது என்னிடமும் ஒரு குறிப்பு எழுதும்படி கேட்டிருந்தார். அப்போது எழுதியதுதான் ‘அம்மாவிற்கு ஒரு கடிதம்’.